அஜய் ஜடேஜா
அஜய் ஜடேஜா

ஜாம்நகா் அரச குடும்பத்தின் வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரா் அஜய் ஜடேஜா அறிவிப்பு

குஜராத்தைச் சோ்ந்த ஜாம்நகா் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரா் அஜய் ஜடேஜா..
Published on

குஜராத்தைச் சோ்ந்த ஜாம்நகா் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரா் அஜய் ஜடேஜாவை ஜாம்நகா் மகாராஜா ஷத்ருசல்யாசிங் ஜடேஜா அறிவித்தாா்.

தசரா பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் தன்னுடைய உறவினரான அஜய் ஜடேஜாவை ஜாம்நகா் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக அறிவித்ததில் மகிழ்ச்சி என மகாராஜா ஷத்ருசல்யாசிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பில், ‘என்னுடைய நீண்ட நாள் குழப்பத்திற்கு இன்று தீா்வு காணப்பட்டுள்ளது. ஜாம்நகா் மக்களுக்காக அஜய் ஜடேஜா சேவையாற்றவுள்ளது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டது.

53 வயதான அஜய் ஜடேஜா கடந்த 1992-ஆம் ஆண்டுமுதல் 2000-ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 196 ஒரு நாள் போட்டிகளிலும் 15 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளாா். அவருடைய தந்தை தௌலத்சிங்ஜி ஜடேஜா, ஜாம்நகா் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக கடந்த 1971 முதல் 1984 வரை பதவி வகித்துள்ளாா்.

தற்போதைய ஜாம்நகா் மகாராஜாவான ஷத்ருசல்யாசிங் ஜடேஜாவும் கடந்த 1966-67-ஆம் ஆண்டுகளில் சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் அதன்பிறகு சௌராஷ்டிரா கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

ஷத்ருசல்யாசிங் ஜடேஜாவும் தௌலத்சிங்ஜி ஜடேஜாவும் கடந்த 1907 முதல் 1933 வரை நவாநகா் (அ) ஜாம்நகரை ஆட்சிபுரிந்த ரஞ்சித்சிங் ஜடேஜாவின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களாவா்.

X
Dinamani
www.dinamani.com