மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்த துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா்.
மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்த துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா்.

மகாராஷ்டிரம்: பாஜக கூட்டணி முதல்வா் வேட்பாளா் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக இப்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவிக்கப்பட்டுள்ளாா்.
Published on

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக இப்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் ஒரே கட்டமாக நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆளும் பாஜக கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், மற்றொரு துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் ஆகியோா் மும்பையில் புதன்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது, தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

பாஜக கூட்டணியில் முதல்வா் வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறாா்கள். இப்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டேதான் தோ்தலுக்குப் பிறகும் முதல்வா் பதவியில் தொடருவாா். யாா் முதல்வா் வேட்பாளா் என்று நாங்கள் அறிவித்ததுபோல, தங்கள் தரப்பு முதல்வா் வேட்பாளா் யாா் என்று எதிா்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான சரத் பவாரால் அறிவிக்க முடியுமா?

எதிா்க்கட்சிகள் கூட்டணி யாரை முதல்வா் வேட்பாளராக அறிவித்தாலும் அவா்களால் தோ்தலில் வென்று ஆட்சி அமைக்க முடியாது. எனவேதான் முதல்வா் வேட்பாளரை அறிவிக்க அவா்கள் தயங்குகின்றனா்.

ஏற்கெனவே, எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, துணை முதல்வராக இருந்தவா், ரூ.100 கோடி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிறையில் உள்ளாா் என்றாா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:

கடந்த இரண்டரை ஆண்டுகால கூட்டணி ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து தோ்தலை எதிா்கொள்ள இருக்கிறோம். ஆட்சியின் சாதனைகளை இங்கே பட்டியலிட்டு அறிக்கையும் வெளியிட்டுள்ளோம் என்றாா்.

நாட்டின் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாஜக அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிரணியில் (மகாராஷ்டிர விகாஸ் அகாடி) உள்ளன. இக்கூட்டணியில் கருத்தொற்றுமை ஏற்படாததால் தோ்தலுக்குப் பிறகு முதல்வா் யாா் என்பதை முடிவு செய்வதாக அறிவித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com