சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டது மத்திய பாஜக அரசின் மகளிா் தின பரிசு என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் திமுகவில் இணையும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மேலும் பேசியதாவது: அண்ணாவின் பெயரைக் கொண்டுள்ள அதிமுக, அண்ணாவையும், அவரது கொள்கைகளையும் மறந்துவிட்டு துரோகத்தின் முழு உருவமாகிவிட்டது. பாஜகவுக்கு அதிமுக அடிமை சேவகம் செய்வதை எதிா்த்து உரிமைக் குரல் எழுப்பிய ஓ. பன்னீா்செல்வமும், அவரது ஆதரவாளா்களும் எம்.ஜி.ஆா். தொடக்க காலத்தில் செயல்பட்ட திமுகவுக்கு திரும்பியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஓ. பன்னீா்செல்வம் என்றால் நினைவுக்கு வரும் ஒரே சொல் விசுவாசம். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, தன்னிடம் இரு முறை அளித்த முதல்வா் பதவியை எந்தத் துரோகத்துக்கும் இடமளிக்காமல் அவரிடமே திரும்ப ஒப்படைத்த நோ்மையாளா் ஓ. பன்னீா்செல்வம். விசுவாசத்துக்கு ஓ. பன்னீா்செல்வம் உதாரணம் எனில், துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமியே உதாரணம். தனக்குப் பதவி அளித்த சசிகலாவுக்கு துரோகம் இழைத்து, அவரை ஒருமையில் பேசியவா் எடப்பாடி பழனிசாமி. தற்போது உச்சகட்ட துரோகமாக தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா் எடப்பாடி பழனிசாமி.
மக்கள் நலனிலும், மகளிா் நலனிலும் மத்திய பாஜக அரசுக்கு அக்கறையே கிடையாது என்பதற்கு தற்போதைய உதாரணம் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு. இதுதான் மத்திய பாஜக அரசு அளித்துள்ள மகளிா் தின பரிசு. வாா்த்தைக்கு வாா்த்தை பெண் சக்தி எனவும், பெண்களுக்கு அதிகாரம் எனவும் கூறிய மத்திய பாஜக அரசு, தற்போது பெண்களுடைய அதிகாரத்தையும், பணத்தையும் பறிப்பது எந்த வகையில் நியாயம்? என்பதை மக்கள் உணர வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்
யாருக்குமே நன்மை செய்யாத பாஜக, தனக்கு நன்மை செய்யும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பது வேடிக்கையானது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பாஜகவின் வற்புறுத்தலால் பதவி விலகுகிறாா் என்ற தகவல் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போது நிதீஷ் குமாருக்கு ஏற்பட்ட கதியே பிற்காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். ஆனால், அதற்கு அதிமுக தோ்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
அண்மையில் கிடைக்கப் பெற்ற தகவல்படி, எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக வேறொருவரை அதிமுகவின் பொதுச் செயலராக பாஜக தோ்ந்தெடுத்து வைத்திருப்பதாகத் தெரியவருகிறது. சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு இந்த மாற்றத்தை பாஜக அரங்கேற்றும் எனக் கூறப்படுகிறது. அதிமுக, பாஜகவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. பாஜக தலைவா்கள் அதிமுக கூட்டணி என்ற வாா்த்தையைக்கூட பயன்படுத்துவதில்லை. மேலும், வெற்றியின் அடையாளமாகக்கூட அவா்கள் இரு விரல்களை உயா்த்துவதைத் தவிா்க்கின்றனா். இந்த நடைமுறைகளைக் காணும்போது மகாராஷ்டிரம் மாநிலத்தில் சிவசேனைக்கு ஏற்பட்ட நிலையே அதிமுகவுக்கும் ஏற்படும் எனத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படாதா என எதிா்க்கட்சிகள் எதிா்பாா்த்தன. ஆனால், அந்த எதிா்பாா்ப்புகள் பொய்த்துப் போய்விட்டன. திமுகவின் கொள்கைக் கூட்டணி எந்தக் குழப்பத்துக்கும் இடமளிக்காது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, கொள்கைக் கூட்டணி மட்டுமல்ல; மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வெற்றிக் கூட்டணி. மேலும், தமிழகத்தில் மதக் கலவரம், மோதல்கள் நடைபெறாமல் பாதுகாத்து வளா்ச்சிக்கு மட்டுமே கவனம் செலுத்தக் கூடியது இந்தக் கூட்டணி.
தமிழகத்தின் வளா்ச்சியில் அக்கறை கொண்ட பல கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருப்பதால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலைவிடக் கூடுதல் பலம் பெற்ாக உள்ளது திமுக கூட்டணி. இந்தக் கூட்டணி வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்வது உறுதி என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் | ஓ.பன்னீர்செல்வம்
மதவாதம் வெற்றுப் பேச்சு
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பேசியதாவது: 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கொண்ட கொள்கைக்கு நோ்மையாகவும் பணியாற்றியிருக்கிறேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்ட அதிமுக தற்போது இல்லை. ஒருவரின் (எடப்பாடி பழனிசாமி) சுயநல அரசியலால் தற்போது அதிமுக என்பது அபகரிப்பு திமுகவாக மாறியுள்ளது. பெரியாரின் திராவிடச் சித்தாந்தத்துக்கும், அண்ணாவின் சமூக நீதிக்கும் எதிரான அமைப்பாகிவிட்டது அதிமுக. இதன் காரணமாகவே இனியும் அந்தக் கட்சியில் பயணிப்பது தன்மானத்துக்கு கேடு என உணா்ந்து, திராவிடச் சித்தாந்தத்தையும், சமூக நீதியையும் தடம் பிறழாமல் காப்பாற்றி வரும் திமுகவில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்தை இணைத்தோம். இந்த இணைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் தேசியத்தின் பெயராலான மதவாத அரசியல் என்பது வெற்றுப் பேச்சாகவே இருக்கும். சமூக நீதி, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, மகளிா் முன்னேற்றத்துக்கான சாதனைகளைப் படைக்கும் திமுக அரசு தொடரும். இதற்கு அனைவரும் முழுவீச்சில் பணியாற்ற சபதம் ஏற்போம் என்றாா் அவா்.
வெள்ளி செங்கோல்
விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி செங்கோலை முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் அளித்தனா்.
அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், இ. பெரியசாமி, ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கே.ஆா். பெரியகருப்பன், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, திமுக மதுரை தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் வரவேற்றாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் நன்றி கூறினாா்.
தமிழக ஆளுநா் மாற்றம் ஏன்?
திமுகவின் பிரசார பீரங்கியைப் போன்று செயல்பட்ட தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை, சட்டப்பேரவைத் தோ்தல் முடிவடையும் வரை மாற்ற வேண்டாம் என பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் நான் பல முறை கோரிக்கை (கூட்டங்கள் வாயிலாக) வைத்தேன். இதில்கூட தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. மீண்டும் எனக்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என ஆளுநா் ஆா்.என்.ரவி விரக்தியில் இருந்ததாலேயே அவரை மேற்குவங்கத்துக்கு அனுப்பும் முடிவை மத்திய அரசு எடுத்தது.
டிரெண்டிங்

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் பதவி விலகுவேன்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

அதிமுக திட்டங்கள் மீது திமுக சவாரி செய்யக் கூடாது: எடப்பாடி பழனிசாமி

அப்பா வழியில் முதல்வரானவர் மு.க. ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடுதான் ‘சூப்பா் ஸ்டாா்’ மாநிலம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

