ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி மனு: விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல்
ஜம்மு-காஷ்மீருக்கு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த கல்வியாளா் ஜஹூா் அகமது, சமூகவியலாளா் குா்ஷைட் அகமது மாலிக் ஆகியோா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு புதன்கிழமை பதவியேற்ற நிலையில், இந்தப் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் வியாழக்கிழமை பரிசீலனை செய்தனா்.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரினாா்.
அதைக் கேட்ட தலைமை நீதிபதி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370 ரத்து செல்லும்’ என்று தீா்ப்பளித்தது. மேலும், ‘ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்து மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தோ்தலை நடத்தவேண்டும்’ என்றும் தீா்ப்பளித்தது.
அதன்படி, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 42 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தேசிய மாநாட்டுக் கட்சி, 4 சுயேச்சைகள் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரின் ஆதரவுடன் புதன்கிழமை ஆட்சியமைத்தது.