
மேற்கு வங்க கவுன்சிலர் பூர்ணிமா காண்டு உடலில் விஷம் இருந்திருக்கலாம் என்று உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் ஜல்தா நகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர் பூர்ணிமா காண்டு, துர்கா பூஜையின் கடைசி நாளான அக். 11 ஆம் தேதியில் மயக்க நிலையில் அவரது வீட்டில் கீழே விழுந்து கிடந்தார். இதனையடுத்து, அவரை அருகிலிருந்த சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவருக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்னைகளோ இல்லாத காரணத்தினால், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.
அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று பூர்ணிமாவின் மருமகன் மிதுன் காண்டு சந்தேகம் தெரிவித்திருந்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் நேபால் மகாதேவும் அவ்வாறே சந்தேகம் தெரிவித்தார்.
இதற்கிடையில், புகாரின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டது; பின்னர், இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தது.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பூர்ணிமாவின் மற்றொரு மருமகனான தீபக் காண்டு உள்பட 7 பேரை இதுவரையில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடப்பதாகவும் கூறினர்.
ஜல்தாவின் முன்னாள் கவுன்சிலர் தபன் காண்டு, 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, சாலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி பூர்ணிமா காண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.