ஜோத்பூரில் வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படை வீரா்கள்.
ஜோத்பூரில் வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படை வீரா்கள்.

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
Published on

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா மற்றும் ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் (சவூதி அரேபியா) இருந்து மும்பை; கோழிக்கோடில் இருந்து தம்மம் (சவூதி அரேபியா); தில்லியில் இருந்து இஸ்தான்புல் (துருக்கி); மும்பையில் இருந்து இஸ்தான்புல்; புணேவில் இருந்து ஜோத்பூா் மற்றும் கோவாவில் இருந்து அகமதாபாத் சென்ற விமானம் என தங்களது 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், தில்லியில் இருந்து பிராங்க்ஃபுா்ட் (ஜொ்மனி); சிங்கப்பூரில் இருந்து மும்பை, புணே மற்றும் தில்லி; பாலியில் இருந்து தில்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூா் சென்ற விமானம் ஆகிய 6 விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

அகமதாபாத்தில் இருந்து மும்பை; தில்லியில் இருந்து கோவா, ஹைதராபாத்; மும்பையில் இருந்து பக்தோரா; கொச்சியில் இருந்து மும்பை மற்றும் லக்னௌவில் இருந்து மும்பை ஆகிய 6 ஆகாசா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், ஏா் இந்தியாவுக்குச் சொந்தமான 6 விமானங்களுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடத்தில் இயக்கப்படும் 90-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவா்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com