பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு, சீரமைப்பு பணிகள் தீவிரம்

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை தொடங்கியுள்ள தீயணைப்புத் துறையினர்.
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை தொடங்கியுள்ள தீயணைப்புத் துறையினர்.
Updated on
2 min read

பெங்களூரு: பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ள நிலையில், அந்த பகுதியில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

அந்த இடத்தில் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் கான்கிரீட்டை அகற்ற கனரக இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக 6 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், பெங்களூரில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அப்போது, 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்தில் 3 போ் உயிரிழந்திருந்த நிலையில், மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். புதன்கிழமை காலை முதல் நடந்த மீட்புப் பணியில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இச்சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

பெங்களூரு கூடுதல் காவல் ஆணையர் சதீஷ் குமார், இறந்தவா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அரமான்(26), முகமது சாஹில் (19), கிருபாள், சோகித் பாஸ்வான், ஆந்திரத்தைச் சோ்ந்த துளசி ரெட்டி, உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த புல்வான்யாதவ், தமிழகத்தைச் சோ்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோா் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இடிபாடுகளில் இருந்து 13 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். இதில் ஜெகதேவி (45), ரஷீத் (28), நாகராஜு (25), ரமேஷ்குமார் (28), மற்றும் அயாஜ் ஆகிய 5 போ் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் பெங்களூரு வடக்கு மருத்துவமனையிலும், ஒருவர் ஹோஸ்மாட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், கொட்டும் மழையில் மீட்புப் பணியில் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அந்த பகுதியில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அந்த இடத்தில் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் கான்கிரீட்டை அகற்ற கனரக இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனிடையே, உரிய அனுமதி எதுவும் பெறாமல் தரக்குறைவாக கட்டடத்தைக் கட்டியது தொடா்பாக நில உரிமையாளா் முனிராஜ் ரெட்டி, கட்டட ஒப்பந்ததாரா் மோகன் ரெட்டி மற்றும் மேஸ்திரி ஏழுமலை ஆகிய 3 பேர் மீது ஹென்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதுதொடா்பாக முனிராஜ் ரெட்டி மகன் புவன் ரெட்டி, முனியப்பா உள்ளிட்டோரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், இந்தக் கட்டடம் முறையான அனுமதி பெறமால் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்துள்ளது, இது தொடர்பாக உரிமையாளர், ஒப்பந்ததாரர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சொத்தின் உரிமையாளர் ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் பெங்களூரு முழுவதும் சட்ட விரோத நடைபெற்று வரும் கட்டுமானங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் என்றார்.

பிரதமர் நிவாரணம்

கட்டட விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அலுவலக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பெங்களூருவில் ஒரு கட்டுமானம் நடைபெற்று வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் இறந்த சம்பம் குறிந்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com