பெங்களூரு: பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கு முதல்வர் சித்தராமையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக 6 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், பெங்களூரில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அப்போது, 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்தில் 3 போ் உயிரிழந்திருந்த நிலையில், மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். புதன்கிழமை காலை முதல் நடந்த மீட்புப் பணியில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.
இடிபாடுகளில் இருந்து 13 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். படுகாயமடைந்த 5 பேரும் பெங்களூரு வடக்கு மருத்துவமனையிலும், ஒருவர் ஹோஸ்மாட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், மீட்புப் பணியில் பேரிடா் மீட்புக் குழுவினா் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அந்த பகுதியில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் அந்த இடத்தில் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் கான்கிரீட்டை கனரக இயந்திரங்களை கொண்டு மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரின் உடல்நலம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், இறந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் அவர்களைப் பார்த்த பிறகு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என கூறினார்.
ஏற்கனவே, கட்டட விபத்து தொடர்பாக நில உரிமையாளா் முனிராஜ் ரெட்டி, கட்டட ஒப்பந்ததாரா் மோகன் ரெட்டி மற்றும் மேஸ்திரி ஏழுமலை ஆகிய 3 பேர் மீது ஹென்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதுதொடா்பாக முனிராஜ் ரெட்டி மகன் புவன் ரெட்டி, முனியப்பா உள்ளிட்டோரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.