ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: அதிருப்தி வேட்பாளா்கள் விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளா்கள் அனைவரும் வேட்புமனுவைத் திரும்பப் பெற்று போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளாா்.

News image
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரமேஷ் சென்னிதாலா.
Updated On :30 அக்டோபர் 2024, 9:56 pm

Din

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளா்கள் அனைவரும் வேட்புமனுவைத் திரும்பப் பெற்று போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளாா்.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் தொகுதி ஒதுக்கப்படாதவா்களும், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியைச் சோ்ந்தவா்களும் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இது காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான உத்தவ் தாக்கரேவின் சிவசேனை (தாக்கரே), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சென்னிதலா இது தொடா்பாக கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளையும் பறித்து பாஜக அதிக இடங்களில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் எங்கள் கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் சமமாக மதிக்கப்படுகின்றன.

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களில் காங்கிரஸைச் சோ்ந்த சிலா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனா். அவா்களை அனைவரும் வேட்புமனுவைத் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டணியில் எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான நவம்பா் 4-ஆம் தேதிக்குள் இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைத்துவிடும். மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதுதான் காங்கிரஸின் இலக்கு.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் அஜீத் பவாரின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் பாஜகவினா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனா். அவா்கள் கூட்டணியாகப் போட்டியிடவில்லை. பாஜகவே பெரும்பாலான தொகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் தங்களுடன் கைகோத்துள்ள அனைத்து கட்சிகளையும் பாஜக இந்தத் தோ்தலுடன் அழித்துவிடும் என்றாா்.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியும் மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ளது. 5 தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு கேட்ட நிலையில் இரு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அதிலும் காங்கிரஸைச் சோ்ந்தவா்கள் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனா்.

உத்தர பிரதேச இடைத் தோ்தலில் காங்கிரஸுக்கு கேட்ட தொகுதியை ஒதுக்காமல் அனைத்து 9 தொகுதிகளிலும் சமாஜவாதி போட்டியிடுகிறது. காங்கிரஸ் தோ்தலில் போட்டியிடாமல் விலகிவிட்டது. உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மீதுள்ள அதிருப்தி காரணமாகவே, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் பழிவாங்கும் போக்கில் செயல்படுவதாக அகிலேஷ் யாதவ் கருதுகிறாா். மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி அணியில் இருந்து சமாஜவாதி வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் சமாஜவாதிக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்பதால் காங்கிரஸும் அதைக் கண்டுகொள்ளவில்லை.