மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு ஓடும் ரயிலில் சக பயணிகளால் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் ஜல்கான் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர் ஹாஜி அஷ்ரஃப் முன்யார் தனது மகளின் வீட்டிற்கு செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் ஆட்டுக்கறி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், சக பயணிகள் அவர் வைத்திருந்தது மாட்டுக்கறி என சந்தேகித்துள்ளனர்.
அவர் அதை மறுத்த போதிலும், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்தக் காணொளியில் அவரை மிக மோசமாக திட்டும் நபர்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான மிரட்டல்களையும் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முதியவரைத் தாக்கிய நபர்களைப் பிடித்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆளும் கட்சியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து காங்கிரஸ் எம்பி இம்ரான் பிரதாப்கரி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1976-ன் படி பசு, காளை போன்ற விலங்குகள் வெட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் இஸ்லாமிய முதியவர் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சிலரின் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தாக்கப்பட்டது பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.