சொல்லப் போனால்... ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

வல்லுறவுக் குற்றங்களும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகளும் பற்றி...
agitation
எதிர்ப்பு...AP
Published on
Updated on
4 min read

இந்தியாவைப் பற்றி எவ்வளவோ விஷயங்களைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அசிங்கப்பட்டுக்கொள்ளவும் இன்னொன்று இருக்கிறது, ஒரு நாளில் நாடு முழுவதும் சுமார் 90 வல்லுறவுகள் – பெண்கள், மாணவிகள், சிறுமிகள், சின்னஞ்சிறு குழந்தைகள்கூட தப்புவதில்லை – நடந்துகொண்டிருக்கின்றன.

சில நாள்களுக்கு முன் திடீரென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிச் செய்தி நிறுவனத்துக்காக ஒரு கட்டுரை எழுதினார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் வல்லுறவுக் கொலைக்காக அதிர்ச்சி தெரிவித்த முர்மு, இது ஒற்றைச் சம்பவம் அல்ல, தொடர் குற்றங்களின் ஒரு பகுதி என்று நிர்பயாவையெல்லாம் நினைவுகூர்ந்து, கூட்டுமறதி பற்றியெல்லாம் விவரித்ததுடன், போதும் போதும் என்று எல்லாருமாகச் சொல்வோம் என்று உறுதி எடுக்க வலியுறுத்தினார்.

‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம். இவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிவிடக் கூடாது; அவர்களுக்கு உதவுபவர்களையும் விட்டுவிடக் கூடாது. மருத்துவமனை, பள்ளி, காவல்நிலையம், அரசு என்று எந்த நிலையில் அலட்சியம் நடந்தாலும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்’ –  சில நாள்களுக்கு முன் இதைப் பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி.

இவர்கள் இருவருமே இந்த நாட்டின் அதிகார அமைப்பின் உச்சத்தில் இருப்பவர்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நடந்தவை, நடப்பவை அனைத்தும் இவர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. நினைத்தால் அடுத்த நொடியில் அனைத்துத் தகவல்களையும் இவர்களால் பெறவும் முடியும்.

agitation
சொல்லப் போனால்... நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்!

ஒரு நாளில் சுமார் 90 வல்லுறவுகள் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கத்தின்படி) என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமே, அதாவது புகார்களாகப் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. அவ்வாறல்லாமல் இன்னும் எத்தனை நடந்துகொண்டிருக்கின்றன என்ற கணக்குவழக்கு எதுவும் யாருக்கும்  தெரியவர வாய்ப்பில்லை.

போதும் போதும் என்ற வருத்தத்தையும், யாரும் தப்பிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையையும் மட்டும்தான் இவர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்களா?

நாடு முழுவதும் இன்றைய தேதிக்கு எத்தனை வல்லுறவு வழக்குகள் நிலுவையில் - அதாவது டாப் டூ பாட்டம் நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கின்றன?

இந்த வழக்குகள் எல்லாம் எத்தனை ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன?

இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அல்லது நீதிமன்ற மொழியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் எவ்வளவு பேர் சிறையில் இருக்கிறார்கள்? அல்லது இருந்தார்கள்?

குற்றவாளிகளில் அதாவது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் எவ்வளவு பேர் பிணையில் வெளியே வந்து வழக்கம் போல மக்களுடன் மக்களாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்?

இவர்கள் எல்லாம் எப்போதுதான் தண்டிக்கப்படுவார்கள்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்போதுதான் நீதி கிடைக்கும்? உள்ளபடியே கிடைக்குமா?

இவற்றை எல்லாம் உறுதி செய்ய வேண்டியவர்கள் யார்?

agitation
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

ஓர் அண்டா சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒரேயொரு எடுத்துக்காட்டு:

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் – தமிழ் - மலையாளத் திரைப்பட நடிகையொருவர் கடத்தப்பட்டு ஒரு கும்பலால் மிகக் குரூரமான முறையில்  கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இவற்றை விடியோவாகவும் குற்றவாளிகள்  பதிவு செய்திருக்கின்றனர். துணிந்து புகார் செய்ய நடிகை முன்வந்ததால் இந்த அக்கிரமம் வெளியே தெரிந்தது. என்ன நடந்தது, எப்படி நடந்தது, யார் யார் பின்னணி, முன்னணி எல்லாம் ஏறத்தாழ எல்லாருக்குமே தெரியும். ஆனால், 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டே இருக்கிறது. இன்னமும் தீர்ப்பு வந்தபாடுமில்லை, குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவுமில்லை. இந்தக் குற்றவாளிகளும் மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறார்கள் (இப்படியாகப்பட்ட சூழ்நிலையை நம்பி, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்தான் புகார் கொடுக்க முன்வருவார்?).

இந்த வன்கொடுமையைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டியின்  அறிக்கை, நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுத் தற்போது மலையாளத் திரையுலகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆர்கனைஸ்ட் அத்துமீறல்கள் தொடர்பான புகார்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன (பெரிதாக என்னவாகிவிடப் போகிறது, எல்லாவற்றையும் நீதிமன்றங்களில் பார்த்துக்கொள்ளலாம் என்றிருப்பார்களாயிருக்கும் குற்றவாளிகள்!).

கொல்கத்தா பெண் மருத்துவர் வல்லுறவுக் கொலை விஷயத்தில் குடியரசுத் தலைவரே முன்வந்து கண்டித்திருக்கிறார், வருத்தப்பட்டிருக்கிறார். ஆனால், மணிப்பூரில் அத்தனை பெண்கள் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்களே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடியதே – அரசும் அரசு அமைப்புகளும் அதிகார பீடங்களும் செய்தது என்ன? ஏன் ஒருவரும் கண்டிக்க முன்வரவில்லை?

agitation
விஐபிகளுக்கு சிறையெல்லாம் ஒரு பொருட்டே இல்லையா? சசிகலா முதல் தர்ஷன் வரை!

மகாராஷ்டிரத்தில் இரு சின்னஞ்சிறுமிகள் பாலியல்  வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டபோது ஒட்டுமொத்தமாக மக்கள் திரண்டு ரயில்களை மறித்து நிறுத்திய பிறகுதான் நடவடிக்கை எடுக்கவே அரசு முன்வந்தது. கொல்கத்தா சம்பவத்துக்காக மேற்கு வங்கத்தில் போராடும் பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும் அவர்கள் கூட்டாளிகளும்தான் மகாராஷ்டிரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உடன் நிற்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

நாடு முழுவதும் அறியப்பட்ட பில்கிஸ் பானு வல்லுறவு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களாலேயே வெளியே வந்து சுதந்திரமாக நடமாட முடிகிறது – இங்கே எத்தகைய குற்றவாளிகள் என்றாலும் அவர்களுக்குத் தேவைப்படுவது பணம், செல்வாக்கு அல்லது அரசியல் / அதிகாரத்தின் அனுக்கிரகம்; மேலும் இருக்கவே இருக்கிறது நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களேகூட வல்லுறவு வழக்குகளைத் தானாக முன்வந்து விசாரிக்க எத்தகைய அளவுகோல்களைக் கைக்கொள்கின்றன என்று தெரியவில்லை. கொல்கத்தா வழக்கை விசாரிக்க எடுக்கும்போது பிற வழக்குகள் மட்டும் ஏன் தென்படுவதில்லை?

மகாராஷ்டிரத்தில் பந்த் நடத்த மகா விகாஸ் அகாதி அழைப்பு விடுத்தபோது அனுமதிக்க மறுத்தது மும்பை உயர் நீதிமன்றம், ஆனால், அதேவேளை மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் வல்லுறவுக் கொலையில் கொல்கத்தா நீதிமன்றத்தால் பந்த் அனுமதிக்கப்படுகிறது.

வல்லுறவுகளேகூட மத்தியில் ஆளுங்கட்சி அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தால் ஒருவித அணுகுமுறை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தால் ஒருவித அணுகுமுறை.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். வல்லுறவு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஓராண்டுக்குள் தண்டனை விதிக்கும்  வகையில் பேரவையில் சட்ட முன்வரைவை நிறைவேற்றி அனுப்பப் போகிறோம். ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் முற்றுகைப் போராட்டம் என்றிருக்கிறார்.

மமதா எந்தக் கட்சி என்றெல்லாம் பார்க்க வேண்டாம். அனைத்து மாநிலங்களுமே  இதேபோன்ற சட்டங்களை நிறைவேற்றலாம். மத்திய அரசும் இதேபோன்ற நிலை எடுத்து உறுதி செய்யலாம். இந்தியாவில் எந்த மூலை முடுக்கில் என்றாலும் பெண்களுக்கு எதிரான வல்லுறவுக் குற்றம் என்றால் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டனை என்று காலவரையறையை நிர்ணயித்து சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சொற்களில், ‘சமூகத்தில் நிலவும் கேவலமான மனநிலையை’ ஒழிக்க, பிரதமர் மோடியின் சொற்களில் ‘மன்னிக்க முடியாத பாவத்தை’க் களைய இதைவிடச் சிறந்த முன்னெடுப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. பெண்களின் நலனைப் பேசும் யாரும் எந்தக் கட்சியும் எதிர்க்கப் போவதில்லை.

இதற்காக நாட்டின் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்யலாம். இப்படியானால், நீதிமன்றங்கள் வழக்குகளைத் தேர்ந்தெடுத்து விசாரிக்க வேண்டிய தேவையும் இருக்காது.

agitation
சொல்லப் போனால்... அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் குழாயடிச் சண்டை!

முதலில் இந்த அரசியல் தலைவர்கள் எல்லாம் கட்சி எல்லைகளைத் தாண்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முன்வர வேண்டும். மாநிலத்துக்கு ஒரு அணுகுமுறை, ஊருக்கு ஒரு அணுகுமுறை, கட்சிக்கு ஒரு அணுகுமுறை, சாதிக்கு ஒரு அணுகுமுறை என்றிருக்கக் கூடாது, முடியவும் முடியாது.

(மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் வல்லுறவுக் கொலை தொடர்பாக, மாநில அரசையே கலைக்க வேண்டும் என்கிற அளவுக்கு விமர்சனங்களை முன்வைக்கிற, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானுக்கு எதிரான வல்லுறவுக் குற்ற கிரிமினல் வழக்கை மறைத்திருக்கிறார் என்று அவருடைய தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கொன்று தொடுக்கப்பட்டிருக்கிறது).

இப்போதும் நாடறிந்த வழக்குகளிலேகூட பாலியல் – வல்லுறவுக் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட எத்தனை பெரும் புள்ளிகள் வெளியே இருக்கிறார்கள்?

அரசியலைக் கடந்து, பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டிய வேளை வந்துவிட்டது. நம் அரசியல் தலைவர்கள் முன்வந்து கட்டுவார்களா? அல்லது கட்டுவதைப் போல நடிப்பார்களா? அல்லது வழக்கம்போல வாயால் வடை சுட்டுவிட்டுப் போய்விடுவார்களா?

* * *

vazhai
வாழை போஸ்டர்படம்: எக்ஸ்

 யெஸ் டீச்சர்!

எரிச்சலான விஷயங்களைக்கூட கொஞ்சம் ஜாலியாவே சொல்லிட்டுப் போயிடலாம்னு என்று நினைத்து சொல்லப் போனால்... பாருங்கள், இந்தப் பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து (மேலே) சீரியஸான கட்டுரையாக மாத்திடறாங்க. என்னத்த செய்ய?

விஷயத்துக்கு வருவோம்.

மாரி செல்வராஜுங்கிற டைரக்டர் வாழை என்றொரு படம் எடுத்து வெளிவந்திருக்கிறது. சின்னப் பசங்களோட பெரிய பிரச்சினையின் கதை. இது மாரி செல்வராஜோட சொந்தக் கதைன்னும் சொல்றாங்க. இருந்துட்டுப் போகட்டும். இம்சை என்னன்னா, அதுல வர்ற அழகான டீச்சர அந்தப் பையனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்காம் (நிகிலா விமலை யாருக்குதாங்க பிடிக்காது?) படத்தப் பாத்தாங்களோ இல்லையோ, ஃபேஸ்புக்லயும் யூடியூப்லயும் விமர்சனத்த பார்த்தவங்க உள்பட நம்ப ரசிகருங்க எல்லாருமா, எங்களுக்கும் பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப ஒரு அழகான டீச்சரப் பிடிச்சிருந்துச்சி அப்படின்னு ஆரம்பிச்சுட்டாங்க. என்னடா, மதுரைக்கு வந்த சோதனை? இப்ப என்னடான்னா, நாம வேற நல்ல பேரோட அழகான டீச்சர் ஒருத்தர அவசரமாத் தேட வேண்டியிருக்குது. ஏதோ படம் எடுத்தாங்களா, பார்த்துட்டுப் போனமாங்கறத விட்டுட்டு, அந்த ஞாபகம் வருது, இந்த ஞாபகம் வருதுன்னு ஏம்ப்பா இப்படி எல்லாருமா சேர்ந்து கொல்றீங்க?

டாட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.