ஆறு பெண் யானைகளுடன் காட்டுக்குள் தப்பியோடிய ஆண் யானையை 2 வார தேடுதலில் வன அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபாரா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து காண்டாமிருகங்களை ரோந்து செய்வதற்கும் கண்காணிப்பதற்கும், கஜராஜ் என்ற கும்கி யானை துத்வாவுக்கு 2008 ஆம் ஆண்டில் அழைத்து வரப்பட்டது.
அதே சுற்றுவட்டாரத்தில் கமல்கலி, சுஹேலி, கிரண், காவேரி, சுலோச்சனா. சமேலி போன்ற பிற பெண் யானைகளும் இருந்தன.
இந்த நிலையில், ஆக. 14 ஆம் தேதியில், கஜராஜ், தனது சங்கிலிகளை உடைத்து, அடர்ந்த காட்டிற்குள் தப்பி ஓடியது. அதுமட்டுமின்றி, ஆறு பெண் யானைகளும் கஜராஜுடனேயே சென்று விட்டன.
இதனைத் தொடர்ந்து, காணாமல்போன யானைகளை சரணாலய அதிகாரிகள், வன அதிகாரிகள், காவல்துறையினர் உள்பட பல குழுவினர் தேடி வந்தனர். இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஒரு குழுவும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்தது.
இதனையடுத்து, 2 வாரங்களுக்கும் மேலான தேடுதல் நடவடிக்கையால், இந்திய எல்லைக்குள்ளேயே சுற்றித் திரிந்த யானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. துத்வாவும் நேபாளமும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளுவதால், யானைகள் எல்லையைத் தாண்டியிருந்தால், யானைகள் மீட்பது என்பது கடினமாக இருந்திருக்கும்.
துத்வாவின் கள இயக்குநர் லலித் குமார் கூறியதாவது "இது யானைகளின் இனச்சேர்க்கை காலம். இந்த சமயங்களில் ஆண் யானைகள் பெரும்பாலும் உற்சாகமாகவும், கணிக்க முடியாததாகவும் மாறும். கஜராஜ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.
பெண் யானைகளையும் கஜராஜ் காட்டுக்குள் அழைத்துச் சென்றது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு இப்போது முகாமுக்கு திரும்பி வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.