
போபாலில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொல்வதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள சரோஜினி நாயுடு அரசு பெண்கள் பள்ளியில், மாணவர்கள் தாமதமாக வந்தால், கழிப்பறையை சுத்தம் செய்ய ஆசிரியர் வற்புறுத்துவதாகக் கூறி, பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவி ஒருவர் தெரிவித்ததாவது, ``நாங்கள் 5 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும், ஆசிரியர் எங்களை வகுப்பிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார். எங்களை இரண்டு மணிநேரம் வரையில், தனித்து நிற்க வைத்து விடுவார். சில நேரங்களில் கழிப்பறையை சுத்தம் செய்யுமாறும் எங்களிடம் கேட்பார்.
புதிதாக நியமிக்கப்பட்ட வர்ஷா ஜா ஆசிரியர்தான், இதுபோன்ற தண்டனையை அடிக்கடி கொடுப்பார்’’ என்று கூறினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 12 மாணவிகள் மயக்கமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிஃப் மசூத்தும், காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இருப்பினும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.விடம் பள்ளி முதல்வர் கூறியதாவது, ``மாணவர்களுக்கு வழங்கப்படும் வினோதமான தண்டனைகள் குறித்து எங்களுக்கு தெரியாது. இருந்தபோதிலும், மாணவர்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நிலை எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் ஏற்படக் கூடாது.
விசாரணைக் குழுவை அமைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டுள்ளேன். வர்ஷா ஜா என்ற ஒரு குறிப்பிட்ட ஆசிரியருக்கு எதிராக மட்டுமே, மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்; முழு நிர்வாகத்திற்கும் எதிராக அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொட்ர்ந்து, மத்தியப் பிரதேச திறந்தநிலைப் பள்ளி வாரியத்தின் இயக்குநர் பி.ஆர். திவாரி தெரிவித்ததாவது, ``குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை நாங்கள் விடுமுறையில் அனுப்பியுள்ளோம்; அவர் நீக்கமும் செய்யப்படுவார்.
எல்லாவற்றையும் சரிசெய்ய ஒரு மாதகாலம் ஆகும். மாணவர்களின் அனைத்து குறைகளையும் நாங்கள் தீர்ப்போம்’’ என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.