பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கே.சி. தியாகி கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கே.சி. தியாகி கூறியதாவது ``பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையாக காஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். இதன்மூலம், பாலியல் வன்கொடுமையாளர்களின் வலிமை முடிவுக்கு வர வேண்டும்.
தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு இத்தகைய தீவிரமான தண்டனைதான், அவர்களின் கடைசி மூச்சு வரை பாதிப்புகளைத் தரும். அதன்பிறகு, அத்தகைய குற்றத்தைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள்.
மேலும், பாலியல் வழக்குகளில் ஒரு மாதத்திற்குள் விரைவான நீதி வழங்கப்பட வேண்டும். விசாரணைகளில் ஈடுபடும் காவல்துறை பணியாளர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் பெண்களாகவே இருக்க வேண்டும்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு எதிர்ப்பு மசோதா ஆதரிக்கப்படக் கூடியதே’’ என்று தெரிவித்துள்ளார்.