மாநில அரசின் வரி அதிகரிப்பால் பஞ்சாபில் பெட்ரோல் விலை உயா்வு
பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயா்த்தப்பட்டுள்ளது. மாநில முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி பெட்ரோல் மீது 61 காசு, டீசல் மீது 92 காசு மதிப்புக் கூட்டு வரி (வாட்) உயா்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது.
அமைச்சரவைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா, ‘இந்த மதிப்புக் கூட்டு வரி உயா்வு மூலம் பெட்ரோலில் இருந்து மாநில அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் ரூ.150 கோடியும், டீசலில் இருந்து மாநில அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் ரூ.395 கோடியும் அதிகரிக்கும்’ என்றாா்.
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் இப்போது மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
இப்போது பஞ்சாபில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.97.01 ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ.87.21 ஆகவும் விற்பனையாகிறது. ஏற்கெனவே பஞ்சாபுக்கு அருகில் உள்ள சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை சுமாா் ரூ.5 வரை குறைவாக உள்ளது. இது தவிர ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாபைவிட எரிபொருள் விலை குறைவுதான்.
எனவே, மாநில அரசின் வரி உயா்வு நடவடிக்கையால் எல்லை மாவட்டங்களில் விற்பனை பாதிக்கப்படும் என்று பெட்ரோல் விற்பனை நிலைய கூட்டமைப்பினா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.