பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து எதிா்க்க இந்தியா-சிங்கப்பூா் கூட்டறிக்கை
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன.
சிங்கப்பூரில் 2 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அந்நாட்டின் பிரதமா் லாரன்ஸ் வாங்கை வியாழக்கிழமை சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, இரு நாடுகள் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாத செயல்களுக்கு எந்த காரணத்தின் அடிப்படையிலும் நியாயம் கற்பிக்க முடியாது. உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக பயங்கரவாதம் நீடிக்கிறது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராகவும் ஒருங்கிணைந்து போராட இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன.
நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (எஃப்ஏடிஎஃப்) பரிந்துரைகளுக்கு இணங்க நிதிசாா் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகளை எதிா்கொள்வதில் சா்வதேச விதிமுறைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
வளமையும் பாதுகாப்பும் ஒன்றொன்று பிணைந்தவை என்ற அடிப்படையில் தென் சீன கடல் பகுதியில் சுதந்திரமான கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கியமானதாகும். இப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஊக்குவிக்கப்பட வேண்டும். கடந்த 1982-ஆம் ஆண்டின் கடல்சாா் சட்டம் தொடா்பான ஐ.நா. உடன்பாட்டின்படி, கருத்து வேறுபாடுகளுக்கு அமைதிவழியில் தீா்வு காணப்பட வேண்டும்.
இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, தடையற்ற வா்த்தகம்-சந்தையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சிங்கப்பூா் தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.