ஆன்லைன் விற்பனை தளத்தில் ஆர்டர் செய்த பயனருக்கு அளவைவிட குறைவாக வெங்காயம் அளிக்கப்பட்டதால், வருத்தம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சண்டிகரில் பாவ்யே கோயல் என்பவர், சமீபத்தில் ஆன்லைன் விற்பனை தளத்தில் 1 கிலோ வெங்காயத்தை வாங்கியுள்ளார். ஆனால், பெறப்பட்ட வெங்காயத்தின் அளவு குறைவாக இருப்பதாக உணர்ந்த பாவ்யே, அதனை எடை பார்த்தார்.
அப்போதுதான், 1 கிலோவுக்கு பணம் அளித்த நிலையில், 844 கிராம் மட்டுமே அவர்கள் அனுப்பியிருப்பது தெரிய வந்தது. அதாவது, 156 கிராம் அளவில் குறைவான வெங்காயத்தை அவர்கள் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்ததால், பாவ்யேவின் பணம் திருப்பி செலுத்தப்பட்டது. இருப்பினும், பாவ்யேவின் கணக்கினை அவர்கள் முடக்கிவிட்டனர்.
இதனையடுத்து, பாவ்யே தனது எக்ஸ் பக்கத்தில் ``குறைவாக அனுப்பப்பட்ட வெங்காயத்திற்கான பணத்தினை அவர்கள் திருப்பி செலுத்தி விட்டனர். ஆனால், எனது கணக்கினையும் முடக்கி விட்டனர்.
வாங்கும் பொருள்களில் 1 கிராம் அதிகமாக இருந்தாலும், அட்டைப் பூச்சிகளைப் போல கட்டணம் வசூலிக்கிறார்கள்; இது மாதிரியான சம்பவங்களில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ கணக்கில் பாவ்யேவைக் குறிப்பிட்டு, ``உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எங்கள் குழு விரைவில் உங்களை அணுகி உங்களுக்கு சிறந்த முறையில் உதவும்" என்று கூறினர்.
இந்த நிலையில், பாவ்யேவும் ``உங்கள் குறைதீர்ப்பு அதிகாரியாலும் தலைமை நிர்வாக அதிகாரி குழுவாலும், கடந்த மூன்று நாள்களாக என்னுடைய மின்னஞ்சலுக்கு பதிலளிக்க முடியவில்லை; ஆனால், இங்கே நீங்கள் வெறும் வாய் வார்த்தையான சேவை மட்டும் செய்கிறீர்கள்" என்று பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில், பல்வேறு ஆன்லைன் தளங்கள் வழியாக தாங்கள் அனுபவித்த தங்கள் சொந்த அனுபவங்களை, பல்வேறு பயனர்கள் பகிர்ந்து கொண்டனர்.
தரம் மற்றும் பிற சிக்கல்கள் எழக்கூடும் என்பதால், ஆன்லைனில் பழங்களோ அல்லது காய்கறிகளோ ஆர்டர் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பல பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.