மணிப்பூரில் தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் இரண்டு கட்டடங்கள் சேதமடைந்தன.
மணிப்பூரின் பிஷ்ணுபுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டுத் தாக்குதலில் இரண்டு கட்டடங்களை சேதமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இம்பாலில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளின் உயரமான நிலைகளில் இருந்து இந்த ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
ராக்கெட்டுகளின் வீச்சு 3 கிமீக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் தாக்குதலில் உள்ளூர் சமூகக் கூடமும் வெற்று அறையும் சேதமடைந்தன. தொடர்ந்து தீவிரவாதிகள் பிஷ்னுபூர் மாவட்டத்தை நோக்கி பல ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். முன்னதாக மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.