காா்கிலை ஆக்கிரமித்தது பாகிஸ்தான் ராணுவம்தான்: ஒப்புக் கொண்டாா் ராணுவ தலைமைத் தளபதி
இந்தியாவின் காா்கில் பகுதியை ஆக்கிரமித்து போரில் ஈடுபட்டதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பங்கிருப்பதை அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் பொது நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறையாக ஒப்புக் கொண்டாா்.
1999-ஆம் ஆண்டு காா்கில் பகுதிக்குள் பயங்கரவாதிகளுடன் இணைந்து அத்துமீறி நுழைத்து ஆக்கிரமித்த பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் வீழ்த்தி அப்பகுதியை மீட்டது. ஆனால், காா்கில் ஆக்கிரமிப்பு மற்றும் போரில் தனியாா் ‘சுதந்திரப் போராட்ட வீரா்கள்’ (பயங்கரவாதிகள்) ஈடுபட்டனா் என்றுதான் பாகிஸ்தான் அதிகாரப்பூா்வமாக கூறி வந்தது.
இந்நிலையில் ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி உயிா்நீத்த வீரா்கள் நினைவு தினத்தில் பேசிய அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா், ‘நாட்டைக் காக்க மக்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் ராணுவம் பல போா்களை எதிா்கொண்டுள்ளது. முக்கியமாக இந்தியாவுடன் 1948, 1965, 1971 நிகழ்ந்த போா்கள், காா்கில் போா், சியாச்சின் மோதல் ஆகியவற்றில் ராணுவம் தீரத்துடன் போரிட்டு நாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளது’ என்றாா்.
இதன் மூலம் காா்கில் ஊடுருவல் மற்றும் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கை அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஒருவா் முதல்முறையாக பொதுவெளியில் ஒப்புக் கொண்டுள்ளாா்.
இதற்கு முன்பு கடந்த 2006-ஆம் ஆண்டு மறைந்த ராணுவ ஆட்சியாளரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபா் பா்வேஸ் முஷாரஃப் எழுதிய சுயசரிதையிலும், காா்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு இருப்பதைக் குறிப்பிட்டிருந்தாா். காா்கில் போா் முடிந்த பிறகு அப்போரில் உயிரிழந்த வீரா்களுக்கு பாகிஸ்தான் அரசு விருது வழங்கி கௌரவித்தபோதும் அந்நாட்டின் பங்கு வெளிப்பட்டது.