
குவகாத்தி: அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள், சர்ச்சைக்குள்ளான நடிகை சுமி போரஹ் மூலம் ஏமாற்றப்பட்டு, பிஷால் புகானின் ஆன்லைன் வணிகத்தில் பல லட்சத்தை முதலீடு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு, காவல்துறை உயர் அதிகாரி அளித்த தகவலின்படி, சமுதாயத்தில் மிக முன்னணியில் உள்ள பலரின் பெயர்களும், புகான் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களின் பட்டியலில் உள்ளது. ஏராளமான மருத்துவர்கள், அதிக லாபம் கிடைக்கும் என்று எண்ணி, பெரிய தொகைகளை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். முதலீடு செய்த மருத்துவர்கள் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை விசாரணைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
ஆன்லைன் முறைகேடு தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், திப்ருகரைச் சேர்ந்த விஷால் புகான் கைது செய்யப்பட்டார். இதேப் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை சுமி போரஹ். புகான் தனது சகோதரியின் திருமணத்துக்கு மிகப்பெரிய தொகை கொடுத்து நடிகை சுமியை வரவழைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பால், சுமி, தனக்கிருந்த பிரபலத்தை பயன்படுத்தி, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களை, புகான் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.
இந்த நிலையில்தான், புகான் நிறுவனத்தில் ஏமாந்தவர்களின் பட்டியலில், அசாம் மாநில திரைத் திரையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், மருத்துவர்கள், சில அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், பணத்தை மோசடி செய்ய, புகானும் பெரிய நட்சத்திர விடுதிகளில் அவ்வப்போது பெரிய பெரிய ஆள்களுக்கு விருந்து வழங்கியிருக்கிறார். மோசடி மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு விலைமதிப்பற்ற பரிசுகளையும் வழங்கி அவர்களை தன் வசம் ஈர்த்து, பணத்தை ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மோசடியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா விஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.