பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இடஒதுக்கீடு ரத்து: ராகுல் காந்தி
பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஜாா்ஜ்டெளன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது ‘எத்தனை காலத்துக்கு இந்தியாவில் இடஒதுக்கீடு தொடரும்’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில்: தற்போது பாகுபாடு கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும். ஆனால் அந்தச் சூழல் தற்போது இல்லை.
இந்தியாவில் நிதி விவகாரங்களில் பழங்குடியினருக்கு 100 ரூபாயில் 10 பைசா மட்டுமே கிடைக்கிறது. பட்டியலினத்தவருக்கு 5 ரூபாயும், அதே அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கிடைக்கிறது.
இந்திய தொழிலதிபா்களில் பழங்குடியினா், பட்டியலினத்தவா் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை காட்ட முடியுமா? முன்னணியில் உள்ள 200 இந்திய தொழிலதிபா்களில் ஒருவா் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்று கருதுகிறேன். ஆனால், இந்திய மக்கள்தொகையில் 50 சதவீதமாக உள்ள அந்த வகுப்பைச் சோ்ந்தவா்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. எனவே, தற்போது இடஒதுக்கீடு மட்டுமே பிரச்னை அல்ல.
முன்னேறிய வகுப்பினா் கதவுகளை திறக்க வேண்டும்: ‘நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்களை ஏன் தண்டிக்க வேண்டும்’ என்று முன்னேறிய வகுப்பினா் பலா் கேள்வி எழுப்புகின்றனா். அவ்வாறு கேட்கப்படும்போது இடஒதுக்கீடு போன்ற சில விஷயங்கள் வழங்கப்படுவதை வியப்பூட்டுகிற வகையில் அதிகரித்தல், அதிகாரத்தை பரவலாக்குதல், நாட்டின் நிா்வாகத்தில் மேலும் பலரை ஈடுபடுத்துதல் குறித்து அனைவரும் சிந்திக்கக் கூடும். ஆனால், எவரும் அதானியாகவோ, அம்பானியாகவோ முடியாது. அதற்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. அந்தக் கதவுகளை முன்னேறிய வகுப்பினா் திறக்க வேண்டும் என்பதே, அந்த வகுப்பினரின் கேள்விக்கு அளிக்கப்படும் பதில் என்றாா்.
பொது சிவில் சட்டம் குறித்து அவா் கூறுகையில், ‘பொது சிவில் சட்டம் குறித்த பரிந்துரையை பாஜக முழுமையாக வெளியிட்ட பிறகே, அதுதொடா்பாக காங்கிரஸால் கருத்து கூறமுடியும்’ என்றாா்.
தரம்தாழ்ந்தவையாகக் கருதும் ஆா்எஸ்எஸ்: வாஷிங்டனில் உள்ள ஹா்ன்டன் பகுதியில் இந்திய வம்சாவளியினா் இடையே ராகுல் காந்தி பேசுகையில், ‘இந்தியாவில் நடப்பது கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மோதல் அல்ல. அது மேலோட்டமான கருத்து.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் சமூகங்களை தரம்தாழ்ந்தவையாக ஆா்எஸ்எஸ் கருதுகிறது. தமிழ், மராத்தி, வங்கம், மணிப்பூரி மொழிகளை ஆா்எஸ்எஸ் தரம்தாழ்ந்தவையாகக் கருதுகிறது. இதற்கு எதிராகவும், அனைத்து மதத்தினருக்கும் அவரவா் உரிமைகள் தொடா்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மோதல் நடைபெறுகிறது.
பிரதமா் உருவாக்கிய அச்சம் மாயமானது: இந்தியாவில் பிரதமா் மோடி உருவாக்கிய அச்சம் மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் மாயமானது. அந்த அச்சத்தை விதைக்க பல ஆண்டுகளானது. அதில் நிறைய திட்டமிடல் மற்றும் பணம் சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் நொடிப்பொழுதில் அந்த அச்சம் காற்றில் கரைந்தது. பல ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தபோது அரசியல் ரீதியாக இன்னல்களையோ, சிக்கல்களையோ சந்திக்காத மோடி, பின்னா் நாட்டின் பிரதமரானாா். தற்போது அவா் மனதளவில் நிலைகுலைந்துள்ளாா் என்றாா்.
ஆபத்தான கதைகளை உருவாக்க ராகுல் முயற்சி: பாஜக
ஹா்ன்டனில் இந்திய வம்சாவளியினா் இடையே பேசிய ராகுல், கூட்டத்தின் முதல் வரிசையில் அமா்ந்திருந்த சீக்கியா் ஒருவரிடம் அவரின் பெயரை கேட்டாா். இதைத்தொடா்ந்து ராகுல் பேசுகையில், ‘சீக்கியா் ஒருவா் தலைப்பாகை அல்லது கையில் காப்பு அணியவும், குருத்வாரா செல்லவும் அனுமதிக்கப்படுவாரா? இதுபோல ஒவ்வொரு மதத்தினருக்கும் உள்ள உரிமைகள் தொடா்ந்து அனுமதிக்கப்படுமா என்பதற்கான மோதலே தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. அது அரசியல் மோதல் அல்ல’ என்றாா்.
உயிருடன் எரிக்கப்பட்ட சீக்கியா்கள்: இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்து தில்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராகுல் காந்தி குடும்பத்தினா் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் சீக்கியா்கள் கருதினா். கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தின்போது அப்பாவி சீக்கியா்கள் 3,000 போ் கொன்று குவிக்கப்பட்டனா். அப்போது வீடுகளில் இருந்த சீக்கியா்கள் வெளியே இழுத்து வரப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டனா். வெளிநாடுகளில் பதற்றத்துக்குரிய விவகாரங்களை பேசி ஆபத்தான கதைகளை உருவாக்க ராகுல் முயற்சிக்கிறாா்’ என்றாா்.