வாஷிங்டனில் தேசிய பத்திரிகையாளா் மன்றத்தில் பேசிய ராகுல் காந்தி.
வாஷிங்டனில் தேசிய பத்திரிகையாளா் மன்றத்தில் பேசிய ராகுல் காந்தி.

சீன ஆக்கிரமிப்பை மோடி அரசு சரிவர கையாளவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

‘இந்தியப் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டா் அளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமித்த விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி அரசு சரிவர கையாளவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
Published on

‘இந்தியப் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டா் அளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமித்த விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி அரசு சரிவர கையாளவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

அதே நேரம், ‘அமெரிக்காவுடனான உறவு; பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை இல்லை; வங்கதேசத்தில் தீவிரவாத சக்திகள் மீதான கவலை உள்ளிட்ட முக்கிய வெளியுறவு கொள்கை விவகாரங்களில் பாஜக தலைமையிலான அரசுடன் காங்கிரஸ் பரந்த அளவில் உடன்பட்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அமெரிக்காவுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், வாஷிங்டனில் தேசிய பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, அவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்ததாவது:

லடாக்கில் தலைநகா் தில்லி பரப்பளவுக்கு நிகராக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்தது. ஊடகங்கள் இதுகுறித்து எழுதுவதில்லை.

அமெரிக்காவின் நிலப்பரப்பில் 4,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுக்கு அண்டை நாடு ஆக்கரமிப்பு செய்திருந்தால், அமெரிக்கா எப்படி நடந்துகொண்டிருக்கும்?

‘ஆக்கிரமிப்பு அத்துமீறல் சரிவர கையாளப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு அமெரிக்க அதிபா் சென்றுவிட முடியுமா?

எனவே, இந்திய பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ததை, மோடி அரசு சரிவர கையாளவில்லை.

அதே நேரம், அமெரிக்காவுடனான உறவுகள்; பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை இல்லை; வங்கதேசத்தில் தீவிரவாத சக்திகள் மீதான கவலைகள் உள்ளிட்ட முக்கிய வெளியுறவு கொள்கை விவகாரங்களில் பாஜக தலைமையிலான அரசுடன் காங்கிரஸ் பரந்த அளவில் உடன்பட்டுள்ளது.

இந்தியா மீது தொடா்ந்து பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் தூண்டிவிட்டு வருகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தொடரும் வரை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளும் தொடா்ந்து கொண்டேதான் இருக்கும்.

இந்திய-அமெரிக்க உறவைப் பொருத்தவரை, இருதரப்பு நலன் சாா்ந்ததாகவே உள்ளது. அமெரிக்காவுடனான காங்கிரஸின் அணுகுமுறைக்கும், மோடி அரசின் அணுகுமுறைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இந்திய-அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனா்.

அதே நேரம், இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்காவின் எந்தவொரு தலையீட்டையும் காங்கிரஸ் விரும்பவில்லை. இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் என்பது, இந்திய மக்களின் பிரச்னை. அதை இந்திய மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும். எந்தவொரு வெளிநாட்டு தலையீடுக்கும் அதில் இடமில்லை. நாட்டில் ஜனநாயகம் பாதுகாப்படுவதை காங்கிரஸ் உறுதிப்படுத்தும். இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இதை மற்ற ஜனநாயகங்களுடன் ஒப்பிட முடியாது. ஆகையால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது, இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியமானது.

வங்கதேசத்தில் தீவிரவாத சக்திகளின் தாக்குதல்கள் இந்தியாவை கவலைக்கொள்ளச் செய்துள்ளது. இருந்தபோதும், அங்கு நிலைமை விரைவில் சீரடைந்து, அந்த நாட்டுடனான நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதல் முற்றிலும் தவறானது. அத்தகைய வன்முறை நிறுத்தப்படுவது உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடா் தாக்குதல்களை நடத்துவதையும், அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதையும் அனுமதிக்கக்கூடாது என்றாா். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சுமுக பேச்சுவாா்த்தைக்கு காஷ்மீா் விவகாரம்தான் தடைக்கல்லாக உள்ளதா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று ராகுல் பதிலளித்தாா்.

ராஜ்நாத் சிங் மறுப்பு

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய, அடிப்படையற்ற, பொய்யான கருத்துகளை தெரிவித்து, இந்தியாவின் கண்ணியத்துக்கு குந்தகம் விளைவித்துள்ளாா் ராகுல் காந்தி. அவரது செயல் மிகவும் வெட்கக் கேடானது’ என்றாா்.

ராகுல் இல்லம் முன் பாஜக சீக்கிய அணியினர் ஆர்ப்பாட்டம்

சீக்கிய சமூகத்தினர் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வலியுறுத்தி தில்லியில் உள்ள அவரது இல்லம் முன் தில்லி பாஜகவின் சீக்கிய பிரிவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினரை திங்கள்கிழமை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது, "சில மதங்களை, மொழிகளை, சமூகத்தினரை ஆர்எஸ்எஸ் அமைப்பு தாழ்வாகக் கருதுகிறது' என்று ராகுல் குற்றஞ்சாட்டினார்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீக்கியர் ஒருவரிடம், "தலைப்பாகை அணிந்துள்ள சகோதரர், உங்களுடைய பெயர் என்ன' என்று கேட்டார். தொடர்ந்து, பேசிய ராகுல், "சீக்கியர் தலைப்பாகை அணிய அல்லது குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாரா? என்பதற்கான மோதல்தான் இந்தியாவில் நடைபெறுகிறது. இது அவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உணர்வு ரீதியிலான பிரச்னைகளைத் தூண்டி ஆபத்தான பிம்பத்தை உருவாக்க ராகுல் முயற்சிக்கிறார் என்றும் அக்கட்சி குற்றஞ்சாட்டியது.

ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக தில்லியில் பாஜகவின் சீக்கிய பிரிவினர் ராகுலின் இல்லம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஞ்ஞான் பவனிலிருந்து ஜன்பத் சாலையில் தற்போது ராகுல் தங்கி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லம் நோக்கி, பதாகைகளுடன் செல்ல முயன்ற பாஜகவினரை தில்லி காவல் துறையினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

அமெரிக்காவில் தெரிவித்த சீக்கியர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோருமாறும், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

X
Dinamani
www.dinamani.com