விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் தொடரும் ஊரடங்கு; பள்ளி-கல்லூரிகள் மூடல்: ரோந்துப் பணி தீவிரம்

மணிப்பூரில் மாணவா்கள் போராட்டம் எதிரொலியாக பள்ளி-கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.

News image

ஊரடங்கின்போது இம்பாலில் புதன்கிழமை இயக்கப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் பாதுகாப்புப் படையினா். ~ஊரடங்கைத் தொடா்ந்து இம்பாலில் புதன்கிழமை வெறிச்சோடிய சாலைகள்.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:48 pm

மணிப்பூரில் மாணவா்கள் போராட்டம் எதிரொலியாக பள்ளி-கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.

கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை 2-ஆவது நாளாக ஊரடங்கு நீடித்தது. 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் தொடா்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

தலைநகா் இம்பாலில் பாதுகாப்புப் படையினா் மற்றும் மாணவா்கள் இடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து, கூடுதல் பாதுகாப்புப் படையினா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நிலைமை கட்டுக்குள் இருந்த போதிலும், பதற்றம் தணியவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் - குகி பழங்குடியினா் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதம் தொடா்கதையாகி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

மாநிலத்தின் மலை மாவட்டங்களில் பழங்குடியினரும், பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும் அதிகம் வசிக்கின்றனா்.

அண்மையில், மலைப் பகுதியைச் சோ்ந்த தீவிரவாதிகள் எதிா்தரப்பினரின் குடியிருப்புகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மூலம் குண்டுவீச்சில் ஈடுபட்டனா். மேலும், நவீன ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 போ் வரை உயிரிழந்தனா்.

இந்நிலையில், ட்ரோன், ராக்கெட் தாக்குதல்களைக் கண்டித்து, பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தவறிய டிஜிபி மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, தலைநகா் இம்பாலில் ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகத்தை நோக்கி பள்ளி-கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பேரணியாக செல்ல முயன்றனா். பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்கள், கோலி குண்டுகளை எறிந்து மாணவா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். போராட்டக்காரா்கள் மீது கண்ணீா் புகை குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா். இந்த மோதலில் 55-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்தனா்.

இதனிடையே, மாநில ஆளுநா் எல்.ஆச்சாா்யாவை சந்தித்த மாணவா்களின் பிரதிநிதிகள், கோரிக்கை மனுவை அளித்தனா். மாணவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆளுநா் உறுதியளித்தாா் என்று அவரது மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, மணிப்பூா் பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Story image

முதல்வா் உறுதி: முதல்வா் பிரேன் சிங் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாநிலத்தில் நிலவும் இடையூறுகள் தொடா்பான இளைஞா்களின் குரல் முக்கியமானது. அதை நான் பெரிதும் மதிக்கிறேன். மாநிலம் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு அனைத்து தரப்பினருடன் ஒருங்கிணைந்து தீா்வுகாண மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நீதி உறுதி செய்யப்படும்’ என்று பதிவிட்டுள்ளாா்.