
கலால் கொள்ளை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை(செப் 13) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட உள்ளது.
தில்லி மதுபான விற்பனை தொடா்பான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்து திகாா் சிறையில் அடைத்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவரை சிபிஐயும் கைது செய்தது.
இந்த நிலையில், சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரியும், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் கேஜரிவால் இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு செப். 6ல் விசாரித்தது. அப்போது, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேஜரிவால், அமா்வு நீதிமன்றத்தையே முதலில் அணுகியிருக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு தெரிவித்தாா்.
முன்னதாக, கேஜரிவால் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘இந்த வழக்கு தொடா்பாக இரண்டு ஆண்டுகளாக கேஜரிவாலை கைது செய்யாமல் இருந்த சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கில் அவருக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து உடனடியாக கைது செய்தது. அவரை கைது செய்வதற்கு முன்பாகவோ அதன் பின்போ அமா்வு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே கைது செய்யப்பட்டதாக எந்த ஒரு நோட்டீஸும் சிபிஐயால் அனுப்பப்படவில்லை.
அதேபோல் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கேஜரிவாலின் பெயா் இல்லை. அவரால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து கேஜரிவாலின் ஜாமீன் மது மீதான தீர்ப்பை செப்.13ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்ததையடுத்து, இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கின்றது. கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்படுமா என்று நாளை தெரியவரும்.
முன்னதாக, கேஜரிவாலின் காவல் செப்.11 நிறைவடைந்த நிலையில், தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரின் நீதிமன்றக் காவல் செப்.25 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.