கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து: இந்தியாவில் அனுமதி ரத்து!

கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கண் சொட்டு மருந்து
கண் சொட்டு மருந்து
Published on
Updated on
2 min read

கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது.

இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும்போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருள்களை பார்க்கும்போது ஏற்படும் கண் மங்கலைத் தடுக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திருக்கிறது.

மேலும், மருந்து தயாரிப்பு நிறுவனமானது, இந்த கண் சொட்டு மருந்தை, மக்கள் யார் வேண்டுமானாலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியதாகவும் ஆனால், இந்த மருந்துக்கு மத்திய அரசு, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே விற்பனை செய்யக் கூடிய மருந்தாக அனுமதி வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 'பிரெஸ்வு' (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைக் கூறி விளம்பரம் செய்வது, மருந்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனம் என்ன சொல்கிறது?

ஆனால், என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அளித்த விளக்கத்தில், பிரெஸ்வு கண் சொட்டு மருந்து தொடர்பாக நிரூபிக்கப்படாத அல்லது தவறான எந்த தகவலையும் நாங்கள் தெரிவிக்கவில்லை, அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்று நியாயம் பெறுவோம் என்று தெரிவித்துள்ளது.

எங்களது மருந்துக்கு, 234 நோயாளிகளிடம் பரிசோதனை செய்து, அதில் வெற்றி பெற்ற பிறகே, அதனை அடிப்படையாக வைத்து இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியிருந்தது, இந்த மருந்தைப் பயன்படுத்தியவர்களின் கண்பார்வை மேம்பட்டது, படிக்கும்போது கண்ணாடி அணிவது குறைந்தது என்று நிரூபிக்கப்பட்டது என நிறுவனம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே உள்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்கு, அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கி, அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இதுவரை எந்த பெரிய பாதிப்புகளும் ஏற்படவில்லை. இதே மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

கண் சொட்டு மருந்து
இனி ஆண் குழந்தைகளே பிறக்காதா? குறைந்துவரும் ஒய் குரோமோசோம்கள்!

நடுத்தர வயதில், இயற்கையாகவே கண் பார்வை குறைபாடு ஏற்படுவோர் மற்றும் ப்ரெஸ்பியோபியா போன்ற குறைபாடுகளை புதிய கண் சொட்டு மருந்து சரி செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பிரெஸ்வு மருந்து அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 'பிரெஸ்வு' (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள், பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும், இதன் விலை ரூ.350 என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com