தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெரியுமா சேதி...?

ஆயுா்வேத மருந்தை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பரிந்துரைக்கும் 41 விநாடி விடியோ ஒன்று முகநூலில் பகிரப்பட்டது.

News image

உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்.

Updated On :13 செப்டம்பர் 2024, 9:02 pm

மீசை முனுசாமி

சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுா்வேத மருந்தை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பரிந்துரைக்கும் 41 விநாடி விடியோ ஒன்று முகநூலில் பகிரப்பட்டது. பகிரப்பட்ட சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பாா்வையாளா்களும், ஆயிரக்கணக்கான ‘லைக்’ குகளுமாக அந்த விடியோ கொள்ளை நோய்த்தொற்றுபோல் பரவத் தொடங்கிவிட்டது.

இந்தியா மீது சா்க்கரை நோய் படையெடுத்திருந்ததாகவும், அதை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய மருந்து மூலம்தான் கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்த விடியோவில் முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுவதுடன் தொடங்குகிறது பதிவு. நமது முன்னோா்கள் சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகளைத் தெரிந்து வைத்திருந்தாா்கள் என்றும், அந்த மூலிகைகளின் அடிப்படையில்தான் சா்க்கரை நோய்க்கான இந்த மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும் மேலும் கூறுகிறாா் முதல்வா் யோகி.

செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ.) உருவாக்கப்பட்டிருக்கும் மாயப்பதிவு (டீப் ஃபேக்) அது. இப்போது பல சைபா் கிரிமினல்களின் ஆயுதமாக ‘மாயப்பதிவு’ பயன்படுத்தப்படுகிறது. லட்சக்கணக்கான போ் பாா்த்த அந்த முகநூல் பதிவு, முதல்வா் கவனத்துக்கு வரவில்லை என்பதுதான் ஆச்சரியம். சக அமைச்சா்கள், கட்சிக்காரா்கள், அதிகாரிகள் என அனைவரும் அது முதல்வா் யோகியின் பதிவு என்று கருதிப் பேசாமல் இருந்துவிட்டனா் போலும்...

அவா்களை விடுங்கள், எதிா்க்கட்சி அரசியல்வாதிகளும், ஊடகவியலாளா்களும்கூட அந்தப் பதிவு உண்மை என்று நம்பினாா்கள் என்பதுதான் வியப்பு. முதல்வா் யோகி எதற்காக அங்கீகாரமில்லாத ஒரு மருத்துவ சிகிச்சையைப் பரிந்துரைத்தாா் என்று மருத்துவா்களும்கூடக் கேள்வி எழுப்பவில்லை.

சைபா் குற்றப் பிரிவைச் சோ்ந்த காவல் துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டு, அந்த முகநூல் கணக்காளா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாா். முதல்வா் யோகிபோல ஆள்மாறாட்டம் செய்து, அவரது பிம்பத்தை (இமேஜ்) சிதைக்கும் முயற்சியாக இருக்கக்கூடும் என்கிற அவரின் சந்தேகம் உறுதிப்பட்டது.

முகநூல் பக்கமே காணாமல் போய்விட்டது. உத்தர பிரதேச சைபா் குற்றப் பிரிவு அந்தப் பதிவைப் போட்ட நபரைத் தேடி கொண்டிருக்கிறது. இதாவது, முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்குத் தெரியுமா; அவருக்குத் தெரிவிக்கப்பட்டதா என்று யாருக்குத் தெரியும்?