சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹரியாணா தேர்தல்: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

2024 ஆம் ஆண்டின் ஆசிய பெண் செல்வந்தர்களின் பட்டியலில் 29.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் பெண் செல்வந்தராக சாவித்ரி ஜிண்டால் இடம் பெற்றிருந்தார்.

News image
ஆசிய முதல் பெண் செல்வந்தர் சாவித்ரி ஜிண்டால்
Updated On :13 செப்டம்பர் 2024, 6:30 am

DIN

பிரபல தொழிலதிபர் மறைந்த ஓ.பி. ஜிண்டால் மனைவியும் பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயாரும் ஆசிய முதல் பெண் செல்வந்தருமான சாவித்ரி ஜிண்டால்(74), ஹரியாணா அமைச்சரும் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளருமான கமல் குப்தாவுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற செப்.16 கடைசி நாளாகும். இதைத் தொடா்ந்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும்.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 89 இடங்களில் களத்தில் உள்ளது. ஒரு தொகுதியை மட்டும் கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளது. மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்புடன் உள்ள பாஜக, மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளது. முதல்வா் நாயப் சிங் சைனி, லாட்வா தொகுதியில் போட்டியிடுகிறாா்.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், 89 தொகுதிகளில் களம்காண்கிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய நிறைவு நாளான வியாழக்கிழமை உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர் மறைந்த ஓ.பி. ஜிண்டால் மனைவியும் பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயாரும் ஆசிய முதல் பெண் செல்வந்தருமான சாவித்ரி ஜிண்டால்(74), அமைச்சரும் ஹிசார் தொகுதியின் எம்எல்ஏவும் பாஜக வேட்பாளருமான கமல் குப்தாவுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து களமிறங்கியுள்ளார். இதையடுத்து குப்தாவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளார் சாவித்ரி ஜிண்டால்.

வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, ஹிசார் தொகுதியின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்காக சேவை செய்யப்போவதாக உறுதியளித்தார். “ஹிசார் மக்களே எனது குடும்பம், இந்தக் குடும்பத்துடன் எனக்கு உறவை ஏற்படுத்தி கொடுத்தவர் எனது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கும், அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கும் நான் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்,” என்றார்.

சாவித்திரியின் கணவரும், ஜிண்டால் குழும நிறுவனருமான ஓம் பிரகாஷ் ஜிண்டால் மூன்று முறை ஹிசார் தொகுதி பேரவைத் தேர்தலில் (1991, 2000 மற்றும் 2005) வெற்றி பெற்றார். அவர் 2005 இல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். சாவித்ரி அதன்பிறகு அரசியலில் சேர்ந்தார் மற்றும் இரண்டு முறை ஹிசார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கணவரின் மறைவுக்குப் பிறகு அரசியலில் சேர்ந்த சாவித்திரி, அவர் 2005 இல் ஹிசார் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் மற்றும் ஹூடா அரசில் அமைச்சரானார். அவர் மீண்டும் 2009 பேரவைத் தேர்தலில் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மற்றும் 2013 இல் ஹூடா அரசில் மீண்டும் அமைச்சரானார். இருப்பினும், 2014 தேர்தலில் ஹிசாரில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டபோது கமல் குப்தாவிடம் தோல்வி அடைந்தார். மேலும் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 24 ஆம் தேதி அவரது மகன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் குருக்ஷேத்ரா தொகுதி வேட்பாளாரக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து குருஷேத்திராவில் தனது மகனுக்காகவும், ஹிசார் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான ரஞ்சித் சிங் சவுதாலாவுக்காகவும் பிரசாரம் செய்தார். பின்னர், ஹிசாரில் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் சாவித்ரி ஜிண்டாலும் பாஜகவில் இணைந்தார் .

சமீப நாட்களாக, தனது குடும்பத்தின் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிசார் தொகுதியில் வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக சாவித்ரி ஜிண்டா கூறிவந்தார். இந்த நிலையில், பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகிய சாவித்ரி ஜிண்டா, தான் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணையவில்லை என்றும் கூறி வந்தார்.

இதனிடையே மனமுடைந்திருந்த அவரது ஆதரவாளர்கள் கடந்த வியாழக்கிழமை ஹிசாரில் உள்ள ஜிண்டால் இல்லத்தில் கூடி அவரை தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்தனர். இதனைத்தொடர்ந்து சாவித்திரி கூறியதாவது: எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹிசார் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். 'முடியாது' என்று மறுப்பு தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான வியாழக்கிழமை ஹரியாணா அமைச்சரும் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளருமான கமல் குப்தாவுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர், ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் எனது மகனுக்காக (மக்களவைத் தேர்தலில்)பிரசாரம் செய்தேன். நான் பாஜக உறுப்பினர்கூட கிடையாது.

மேலும் கடந்த 20 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். அடுத்த ஐந்தாண்டுகள் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். எனவே ஹிசார் தொகுதி மக்கள் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும். இதுவே எனது கடைசி தேர்தல். ஹிசார் தொகுதி மக்களுக்கான முடிக்கப்படாத பணிகளை முடிக்க விரும்புகிறேன். நான் 'வாக்குறுதி' அளித்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். எனது ஹிசார் மக்கள் என்ன சொன்னாலும் நான் செய்வேன்.

காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஹிசார் தொகுதி மக்கள் என்னை சுயேட்சையாகப் போட்டியிடச் சொன்னார்கள், அது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறினர் என்று அவர் கூறினார். மேலும், “எனது மக்களின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். ஹூடாவுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர் எனது மூத்த சகோதரர். நான் அரசியலுக்கு வந்ததிலிருந்தே எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார் அவர் என்று சாவித்திரி கூறினார்.

வேட்பு மனுவில், சாவித்ரி தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.270.66 கோடி என தெரிவித்துள்ளார். 2009 வேட்புமனுவில் தனது சொத்து ரூ.43.68 கோடி என்று குறிப்பிட்டிருந்தார், இது 2014 தேர்தல் வேட்புமனுவில் ரூ.113 கோடியாக அதிகரித்தது. புத்தகங்கள் படிப்பது, சமையல் செய்வது தனது பொழுதுபோக்காகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் சைவ உணவு உண்பவர் என்று தெரிவித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட 2024 ஆம் ஆண்டின் ஆசிய பெண் செல்வந்தர்களின் பட்டியலில் 29.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் பெண் செல்வந்தராக சாவித்ரி ஜிண்டால் இடம் பெற்றிருந்தார். 74 வயதாகும் ஜிண்டால், அவரது கணவர் ஓ.பி.ஜிண்டால் மறைவுக்குப் பின்னர் ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கிறார். ஓ.பி.ஜிண்டால் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.