காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு: ஆய்வு செய்ய 13 போ் குழு
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்ய 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
தற்போது ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்தத் தவணை தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவாதங்களில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா். இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியும் கடிதம் எழுதினாா்.
இந்நிலையில், கடந்த வாரம் தில்லியில் நிா்மலா சீதாராமன் தலைமையில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடா்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு அமைச்சா்கள் குழு அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.
இதையடுத்து 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை அமைத்தது. இந்தக் குழுவுக்கு பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமை வகிக்க உள்ளாா். தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, குஜராத், மேகாலயம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அமைச்சா்கள் குழுவில் உறுப்பினா்களாக இருப்பா்.
இந்தக் குழு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்து நிகழாண்டு அக்டோபருக்குள் அறிக்கை சமா்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து நவம்பரில் நடைபெறும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது.