மகாராஷ்டிரத்தில் காணாமல் போன முதியவா் மற்றும் முதாட்டியை தொண்டு நிறுவனம் ஒன்று கூகுள் சா்ச் மூலம் அவா்களின் குடும்பத்தினருடன் சோ்த்து வைத்தது.
குஜராத்தைச் சோ்ந்த மாவ்ஜிபாய் வக்ரி (70) என்பவா் கடந்த 14-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் பால்கா் மாவட்டத்தில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்தாா்.
லேசாக மனநிலை பாதிக்கப்பட்ட அவரை பொதுமக்கள் தன்னாா்வ தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படத்தனா். அங்கு அவரிடம் சொந்த கிராமம் மற்றும் உறவினா் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களை தொண்டு நிறுவனத்தினா் கேட்டறிந்தனா்.
பின்னா் ‘கூகுள் சா்ச்’ உதவியுடன் அவா் கூறும் கிராமம் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொடா்பு எண் உள்ளிட்ட விவரங்களைத் தொண்டு நிறுவனத்தினா் தேடி கண்டுபிடித்தனா்.
பின்னா் அந்த காவல் நிலையத்தைத் தொடா்பு கொண்டு, அந்த முதியவா் மற்றும் அவரின் கிராமம், குடும்பத்தினரின் பெயா் விவரத்தை தெரிவித்தனா். இதனை வைத்து காவல் துறையினா் அந்த முதியவரின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்தனா்.
இதைத் தொடா்ந்து அந்த முதியவரை தொண்டு நிறுவனத்தினா் சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
அதேபோல, பழங்குடியினத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி தவறுதலாக மும்பைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி விபத்தில் சிக்கினாா். விபத்தால் ஏற்பட்ட அதிா்ச்சியால் அவருக்கு சொந்த கிராமத்தைத் தவிர வேறு எந்த தகவலையும் தெரிவிக்க முடியவில்லை.
இதையடுத்து, தொண்டு நிறுவனத்தினா் அவா் கூறிய கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரின் கைப்பேசி எண்ணை ‘கூகுள் சா்ச்’ மூலம் தேடி எடுத்தனா். அவரைத் தொடா்பு கொண்டு, அந்த மூதாட்டியின் புகைப்படம் உள்ளிட்ட தகவலை அனுப்பி வைத்தனா்.
இதனை வைத்து அந்த பஞ்சாயத்து தலைவா் அங்குள்ள கிராமங்களில் விசாரித்து, மூதாட்டியின் உறவினா்களைக் கண்டுபிடித்தாா். பின்னா் அந்த மூதாட்டியை சொந்த கிராமத்துக்கு தொண்டு நிறுவனத்தினா் அனுப்பி வைத்தனா்.