ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.

அதில், வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும், ஒரு கிலோ ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (எம்எஸ்பி) ரூ.72 வழங்கப்படும் எனவும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு உறுதிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா ஆகியோர் தேர்தல் அறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டனர்.

அப்போது பவன் கேரா பேசியதாவது: விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவிலான நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் நீர் பாசனம் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

1 லட்சம் அரசுப் பணிகள்: ஜம்மு-காஷ்மீரில் வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும். தேர்தலில் வென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால் 1 லட்சம் அரசுப் பணிகளை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை 30 நாள்களில் வெளியிடப்படும். அரசுப் பணிகள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உள்ளிட்டவற்றுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

ரூ.3,000 மகளிர் உதவித்தொகை: இந்திய ஒற்றுமை நீதிப்பயணத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும்.

சிறுபான்மையினர் ஆணையம்: ஆட்சி அமைத்த 100 நாள்களில் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டு அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்.

மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ அமல்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ள 20 மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.