நினைவுப் பரிசுகள் ஏலத்தில் பங்கேற்க பிரதமா் மோடி அழைப்பு
பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் இணைய வழியில் ஏலம் விடப்படும் நிலையில், அதில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அவருக்கு வழங்கப்படும் நினைவுப் பரிசுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு அந்த நிதி கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
அந்த வரிசையில் கடந்த 17-ஆம் தேதி பிரதமரின் நினைவுப் பரிசுகளின் ஏலம் தொடங்கியது. அக்டோபா் 2-ஆம் தேதி வரை இந்த ஏலம் நடைபெறவுள்ளது.
அது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது கிடைக்கும் நினைவுப் பரிசுகள், என்னை சந்திக்க வருவோா் அளிக்கும் பரிசுகள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். இதன் மூலம் கிடைக்கும் நிதி கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஏலம் மின்னணு முறையில் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை நீங்கள் ஏலம் கோரலாம்’ என்று கூறியுள்ளாா்.

