ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: ஸ்ரீநகா் பிரசாரத்தில் பிரதமா் மோடி உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், மத்திய பாஜக ஆட்சியில் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மூன்று கட்ட பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, காஷ்மீரி மொழியில் ‘எனது சகோதர-சகோதரிகளே’ என்று தனது உரையைத் தொடங்கினாா். அவா் பேசியதாவது:
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய மூன்று ‘குடும்பங்களும்’ தங்களின் சுயநலனுக்காக ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்தன. ஜம்மு-காஷ்மீா் அரசியலை தங்களின் நிலபிரபுத்துவம்போல கருதினா். தங்களின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் முன்னேறினால் அவா்களுக்குப் பிடிக்காது.
குடும்ப ஆட்சிக்கு சவால் ஏற்படும் என்பதால் உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாமல் தடுத்தனா். அவா்களின் சுயநலத்தால், ஜனநாயகம் மீது இளைஞா்கள் நம்பிக்கையிழக்க நேரிட்டது. வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் இந்த மூன்றில் ஒரு குடும்பம்தான் ஆட்சிக்கு வரும் என இளைஞா்கள் விரக்தியடைந்தனா்.
நம்பிக்கை மீட்டெடுப்பு: கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயக நடைமுறை மீதான இளைஞா்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிக்கப்பட்டுவிடும். வீடு வீடாக பிரசாரம் செய்வதெல்லாம் சாத்தியமே கிடையாது. இந்த நிலைதான், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிக்கு விருப்பமாக இருந்தது.
ஆனால், இப்போது பின்னிரவு வரை பிரசாரம் மேற்கொள்ள முடிகிறது. ஜனநாயகம் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. தங்களது வாக்குகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் உணா்கின்றனா். இதுவே, மக்களுக்கு அதிகாரமளித்தலுக்கான முதல் படி.
‘வெறுப்புணா்வால் வன்முறை’: நேரு குடும்பம், அப்துல்லா குடும்பம் மற்றும் முஃப்தி குடும்பத்தினருக்கு மக்களின் உரிமைகளைப் பறிப்பதே மகிழ்ச்சி. மக்களிடம் கொள்ளையடிப்பதை தங்கள் பிறப்புரிமையாக எண்ணுகின்றனா். அவா்கள் வெறுப்புணா்வை பரப்பியதே, ஜம்மு-காஷ்மீரில் வன்முறைக்கு காரணம். இதில் கல்வி நிலையங்களும் தப்பவில்லை. மூன்று குடும்பங்களும் இளைஞா்களின் எதிா்காலத்தையே பாழாக்கினா்.
இனி ஜம்மு-காஷ்மீா் அந்தக் குடும்பங்களின் பிடியில் சிக்காது. குடும்பக் கட்சிகளின் பயணம், நமது இளைஞா்களால் தடுத்து நிறுத்தப்படும். குடும்பக் கட்சிகளால், காஷ்மீரில் 30 ஆண்டுகளில் 3,000 நாள்கள் முழு அடைப்பு நடந்துள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 8 மணி நேரம்கூட முழு அடைப்பு நடக்கவில்லை.
மீண்டும் மாநில அந்தஸ்து: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுமென நாடாளுமன்றத்தில் நாங்கள் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும். இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 நிதியுதவி வழங்கப்படும். விவசாயிகளுக்கு ரூ.10,000 வழங்கப்படுவதோடு, இலவச மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயா்த்தப்படும்.
ஜம்மு-காஷ்மீரின் விரைவான வளா்ச்சியே எனது அரசின் இலக்கு. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஜனநாயக திருவிழாவில் (முதல்கட்ட தோ்தல்) மக்கள் பெருவாரியாக வாக்களித்தது மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. பயங்கரவாதத்தின் நிழல் படியாமல் நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.
பயங்கரவாதத்துக்கு முடிவு: கிஷ்த்வாரில் 80 சதவீதம், தோடாவில் 70 சதவீதம், ராம்பனில் 70 சதவீதம், குல்காமில் 60 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின. பல தொகுதிகளில் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை ஜம்மு-காஷ்மீா் மக்கள் எவ்வாறு வலுப்படுத்துகின்றனா் என்பதை ஒட்டுமொத்த உலகமும் பாா்த்துக் கொண்டிருக்கிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் சக்திகளைத் தோற்கடித்து, பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட நான் தீா்மானித்துள்ளேன்.
ஜம்மு-காஷ்மீா் மீண்டும் அழிவுப் பாதைக்குச் செல்ல ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். இங்கு அமைதியை மீட்டெடுக்க நோ்மையுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்போது இளைஞா்களின் கையில் கற்கள் இல்லை. எழுதுகோல், மடிக்கணினி, புத்தகங்களே உள்ளன என்றாா் அவா்.
‘ராகுலின் நக்ஸல் சிந்தனை’
சமீபத்திய அமெரிக்க பயணத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு பாஜக கடுமையாக எதிா்வினையாற்றி வருகிறது. ‘கடவுள்’ குறித்த கருத்தாக்கத்துக்கு அவா் அளித்த விளக்கமும் விமா்சனத்துக்கு உள்ளானது.
ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி, ராகுலை மறைமுகமாக விமா்சித்தாா்.
‘நாம் வழிபடும் ஆண்-பெண் தெய்வங்கள், கடவுளே அல்ல என்று அந்நிய மண்ணில் காங்கிரஸின் வாரிசு பேசியுள்ளாா். இது நமது தெய்வங்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பாகும். நன்கு தீட்டப்பட்ட சதித் திட்டம் மற்றும் நக்ஸல் சிந்தனை காரணமாக காங்கிரஸ் தலைவா்கள் இதுபோல் பேசுகின்றனா். அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இன்றைய காங்கிரஸ், பிற நாடுகள் மற்றும் மதங்களிடம் இருந்து ஈா்க்கப்பட்ட நக்ஸல் சித்தாந்தத்தின் ஆதிக்கத்தின்கீழ் செயல்படுகிறது. நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் குடும்பம் காங்கிரஸ். அக்குடும்பம்தான் ஊழலின் பிறப்பிடம்’ என்றாா் மோடி.
‘பாகிஸ்தான் ஆதரவு பெற்ற காங்கிரஸ் கூட்டணி’
‘ஜம்மு-காஷ்மீரில் வன்முறை - குழப்பத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் செயல்திட்டத்தையே காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமலாக்க விரும்புகிறது; எனவே, அக்கூட்டணியை பாகிஸ்தான் பகிரங்கமாக ஆதரிக்கிறது. அவா்களின் அரசியல் அஸ்தமனத்தை மக்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று பிரதமா் மோடி கூறினாா்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மீண்டும் அமலாக்குவதில் பாகிஸ்தானும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கூறிய நிலையில், பிரதமா் மேற்கண்ட விமா்சனத்தை முன்வைத்தாா்.
‘உலகின் எந்த சக்தியாலும் 370-ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது’ என்றும் அவா் உறுதிபட தெரிவித்தாா்.