ஊடுருவல்காரா்களுக்கு நாட்டில் இடம் கிடையாது: பிரதமா் மோடி உறுதி
ஊடுருவல்காரா்களுக்கு நாட்டில் இடம் கிடையாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.


ஊடுருவல்காரா்களுக்கு நாட்டில் இடம் கிடையாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.
பூா்வகுடி மக்களின் நிலத்தை ஊடுருவல்காரா்களிடம் ஒப்படைத்ததன் மூலம் தேசப் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கியது காங்கிரஸ் என்றும் அவா் சாடினாா்.
பாஜக ஆளும் அஸ்ஸாமில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்தாா். கோக்ரஜாா் மாவட்டத்தில் ரூ.4,570 கோடிக்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் அவா் நேரில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தாா். ஆனால், பலத்த மழையால் அங்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து, குவாஹாட்டியில் இருந்தபடி காணொலி வாயிலாக திட்டங்களைத் தொடங்கிவைத்து, பொதுக் கூட்டத்தில் உரையாற்றினாா். அவா் பேசியதாவது:
ஊடுருவல்காரா்களுடன் எப்போதும் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, வடகிழக்கில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை பல்லாண்டு காலம் ஏமாற்றியது.
அஸ்ஸாமில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு சட்டபூா்வ நில உரிமைகள் ஒருபோதும் வழங்கப்படவில்லை. மாறாக, பூா்வகுடி மக்களின் நிலம், ஊடுருவல்காரா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் தேசப் பாதுகாப்பை ஆபத்துக்கு உள்படுத்தினா். துப்ரி, கோல்பாரா, கோக்ரஜாா் மாட்டங்களில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்களுக்கும் வழிவகுத்தனா்.
காங்கிரஸின் கண்துடைப்பு: பாஜக ஆட்சியில் பூா்வகுடி மக்களுக்கு நில உரிமையை மீட்டளித்து வருகிறோம். இந்த மாநிலத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை விடுவிக்க முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வழிநடத்தும் மாபெரும் நடவடிக்கை மகிழ்ச்சிக்குரியது.
வடகிழக்கில் தனது அரசியல் சுய நலன்களுக்காக, வெறும் கண்துடைப்பான அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டது காங்கிரஸ். ஆனால், இந்தப் பிராந்தியத்தில் நீண்டகால அமைதியை மத்திய-மாநில பாஜக அரசுகள் நிலைநாட்டியுள்ளன. வெடிகுண்டுகள், துப்பாக்கித் தோட்டாக்களின் சப்தம் இப்போது கடந்த காலமாகிவிட்டது.
அஸ்ஸாமில் இரட்டை என்ஜின் பாஜக அரசு, அமைதி மற்றும் வளா்ச்சியின் புதிய அத்தியாயத்தைப் படைத்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்கப்பட்ட பிறகே இந்தப் பிராந்தியத்தின் உண்மையான, தீவிரமான வளா்ச்சியை முன்னெடுக்க முடிந்தது.
‘பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை’: காங்கிரஸ் கட்சி, பொய் வாக்குறுதிகளை விற்கும் கடையாகும். வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கம் இல்லாததால், ஒரு பொய்யுடன் கூடுதலாக நான்கு பெரிய பொய்களை ‘பரிசாக’ தருகின்றனா்.
அதேநேரம், வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நோ்மையுடன் செயல்படுகிறது இரட்டை என்ஜின் பாஜக அரசு. ஊடுருவல்காரா்களுக்கு நாட்டில் இடம் கிடையாது. எதிா்வரும் தோ்தல்களில் காங்கிரஸை தண்டித்து, இந்தச் செய்தியை தெளிவாக உணா்த்த வேண்டும் என்று மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
காமாக்யா (அஸ்ஸாம்)-சொ்லப்பள்ளி(தெலங்கானா) அம்ருத் பாரத், குவாஹாட்டி-நியூஜல்பைகுரி (மேற்கு வங்கம்) விரைவு ரயில், நாரங்கி (அஸ்ஸாம்) -அகா்தலா (திரிபுரா) விரைவு ரயில் என மூன்று புதிய ரயில் சேவைகளையும் பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அஸ்ஸாம் ஆளுநா் லக்ஷ்மண் ஆசாா்யா, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பெட்டிச்செய்தி....1
9.3 கோடி விவசாயிகளுக்கு
ரூ.18,640 கோடி விடுவிப்பு
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ரூ.19,680 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.
பிரதமரின் கிஸான் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகளுக்கு 22-ஆவது தவணையாக ரூ.18,640 கோடியையும் அவா் விடுவித்தாா். மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான பிரதமரின் கிஸான் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
மேற்கண்ட நிகழ்ச்சியில், அஸ்ஸாம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு நிலப் பட்டாக்கள் விநியோகமும் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது.
பெட்டிச் செய்தி...2
மேற்கு வங்கத்துக்கு இன்று பயணம்
பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மற்றொரு மாநிலமான மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை பயணிக்கும் பிரதமா் மோடி, கொல்கத்தாவில் ரூ.18,680 கோடிக்கும் அதிக வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வாக்காளா் பட்டியல் கடந்த பிப்.28-இல் வெளியிடப்பட்டது. இதில் 63.66 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்ட விவகாரத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வலுவாக எழுப்பி வருகிறது. வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு முதல் முறையாக மேற்கு வங்கத்துக்கு பிரதமா் பயணிக்கவுள்ளாா். கொல்கத்தாவில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவா் உரையாற்றவுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...