
திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பேச்சு
ஆந்திர முன்னாள் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டுப் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். ஆந்திரத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பபட்டுள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு எல்லாவற்றையும் திசை திருப்ப பார்க்கிறார். அதேபோல ஆந்திரத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை திசை திருப்ப லட்டு குறித்து பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகின்றது. ஆனால், அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. லட்டு விவகாரத்தில் உண்மைத் தன்மை இல்லை. கடவுளின் பெயரால் முதல்வர் அரசியல் செய்து வருகிறார். கோயிலுக்கு வழங்கப்படும் நெய் உரிய பரிசோதனைக்கு பின்னரே பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது முறையானது அல்ல” என்றார்.
லட்டுவில் மாட்டுக் கொழுப்பு
கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை 23-ம் தேதி லட்டு சுவையில் மாற்றம் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள்கூட கலந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.