
நட்சத்திரத்தை பெயரில் கொண்டிருக்கும் மிக முன்னணி மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அதன் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பொதுவெளியில் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெலிகிராம் செயலியில், சுமார் 3.1 கோடி வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மருத்துவ அறிக்கை உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெலிகிராமின் சாட்பாட்ஸ் வழியாக வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெறலாம் என்றும், ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அண்மையில்தான் சமூக விரோத செயல்களுக்கு டெலிகிராம் உதவுவதாக, அதன் தலைமை செயல் நிர்வாகி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஹேக் செய்யப்பட்ட நிறுவனத்தின் தகவல்கள் சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராமில் பரவியிருக்கிறது.
இது குறித்து வெளியாகியிருக்கும் தகவலில், எக்ஸ்இஎன்இசட்இஎன் என்ற பெயரில் உருவாகப்பட்டிருக்கும் முகவரியில், சாட்பாட்ஸ் சென்று, அந்த மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு பெற்றவர்களின் விவரங்கள், அவர்கள் எந்தவிதமான காப்பீடு வைத்திருக்கிறார்கள், இதுவரை அவர்கள் பெற்ற காப்பீடு தொகை, வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நோய் பற்றிய மருத்துவ அறிக்கை மற்றும் பெயர், தொலைபேசி எண், வரி விவரம், அவர்களது அடையாள அட்டைகள், மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவ முடிவுகள் என அனைத்தையும் கோரிக்கையாக வைத்துப் பெற முடியும்.
சில மருத்துவக் காப்பீட்டுக் கோரிக்கைகள் கடந்த ஜூலை மாதத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களும் பொதுவெளியில் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 7.24 டெராபைட்ஸ் அளவிலான தகவல்கள் இதில் கிடைக்கின்றனவாம்.
இது குறித்து மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் கூறுகையில், ஊடுருவல் நடந்திருப்பதை ஒப்புக் கொண்டிருப்பதோடு, சட்டத்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருவதோடு, மிக முக்கிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. இவ்வாறு, ஒரு வாடிக்கையாளரின் ஆவணங்களைப் பெறுவது சட்டவிரோதம் என்றும், இந்த குற்றச்செயலுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாடிக்கையாளர்களின் விவரங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.