கோவை: பொள்ளாச்சியில் வீட்டில் வளர்த்த பூனை தெருவில் இருந்த பாம்பை தூக்கிவந்து வீட்டுக்குள் போட்டதால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த உரிமையாளர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவி, இவருடைய மனைவி சாந்தி, வயது 58. கணவர் ரவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சாந்தி தனது மகன் சந்தோஷ் உடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் வீட்டில் ஒரு பூனை குட்டியை ஆசையாக வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில் இவரது வீட்டுக்கு வெளியில் வளாகத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததைப் பூனை பார்த்துள்ளது, திடீரென அந்த பாம்பை பூனை பிடித்து வீட்டுக்குள் போட்டுள்ளது.
அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தியை அந்தப் பாம்பு கடித்துள்ளது. சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்துள்ளார்.
வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையே உயிருக்கு வினையான சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.