
தில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.
வில்மிங்டன் நகரில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அவா், அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இதைத் தொடா்ந்து, இருதரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.
‘க்வாட்’ உச்சி மாநாடு
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவில் பிரதமா் மோடி மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
‘க்வாட்’ உச்சி மாநாடு மட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெறும் ‘எதிா்காலத்துக்கான மாநாட்டிலும்’ மோடி உரையாற்றவுள்ளாா்.
‘ஆவலுடன் காத்திருக்கிறேன்’
அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்
“அதிபர் பைடனின் சொந்த ஊரான லில்மிங்டனில் நடத்தும் க்வார் உச்சி மாநாடு மற்றும் ஐ.நா. அவையில் நடைபெறும் ‘எதிா்காலத்துக்கான மாநாட்டிலும்’ கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக 3 நாள்கள் பயணமாக அமெரிக்காவுக்கு செல்கிறேன்.
க்வார் உச்சிமாநாட்டில், எனது நண்பர்களான அதிபர் பைடன், பிரதமர்கள் அல்பானீஸ் மற்றும் கிஷிடா ஆகியோருடன் கலந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கிறேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றுவதற்காக ஒற்றை எண்ணம் கொண்ட நாடுகளின் முக்கிய மாநாடாக இது உள்ளது.
பைடனுடனான சந்திப்பு, நமது மக்களின் நலனுக்காகவும், இந்தியா - அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும்.
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அமெரிக்காவின் முக்கிய வணிக நிறுவனங்களின் தலைவர்களை காணவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஐ.நா.வில் நடைபெறும் எதிர்காலத்துக்கான மாநாடு என்பது மனித குலத்தின் முன்னேற்றத்துக்கான பாதையை வகுக்க உலக சமூகத்துக்கான ஒரு வாய்ப்பாகும். இதில் கலந்துகொண்டு எனது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்புடன் சந்திப்பா?
பிரதமரின் பயணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடன், டிரம்புடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மிஸ்ரி, ‘பிரதமருடன் பல்வேறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எந்தவொரு குறிப்பிட்ட சந்திப்பு தொடா்பாகவும் இப்போது எதுவும் கூற இயலாது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.