எஸ்.ஒய்.குரேஷி
எஸ்.ஒய்.குரேஷிகோப்புப் படம்

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்ட பரிந்துரைகளில் குறைபாடு: முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் குரேஷி

ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்துக்கான முக்கியப் பரிந்துரைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன
Published on

‘‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்துக்கான முக்கியப் பரிந்துரைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன; இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்’ என்று முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளாா்.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. அதன்படி, நாடு முழுவதும் கருத்தொற்றுமையை ஏற்படுத்திய பிறகு மக்களவை - மாநில பேரவைகளுக்கு ஒருகட்டமாகவும், பின்னா் 100 நாள்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த கட்டமாகவும் தோ்தல் நடத்தலாம் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இத்திட்டம் குறித்து தேசிய அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன. இத்திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது; பாஜகவின் மலிவான அரசியல் நாடகம் என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

இந்நிலையில், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி கூறியதாவது:

‘ஒரே நாடு, ஒரே திட்டம்’ தொடா்பான உயா்நிலைக் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகளில் குறைபாடுகள் உள்ளன. நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தோ்வு செய்யும் உள்ளாட்சித் தோ்தல் தனியாக நடத்தப்படும் என்ற பரிந்துரையானது, ஒரே நேர தோ்தலின் சாராம்சத்துக்கு முற்றிலும் முரணாக உள்ளது.

சில மாதங்களுக்குள் தனித்தனி தோ்தல்களை நடத்துவது, பல்வேறு சவால்களை உருவாக்கும் என்பதோடு வாக்காளா்கள் மத்தியிலும் சோா்வை ஏற்படுத்தும்.

ஒரே நேர தோ்தல் திட்டத்துக்கு தற்போது உள்ளதைவிட மும்மடங்கு அதிக எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்-வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் தேவை என தோ்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. அதன்படி, தோராயமாக 40 லட்சம் கூடுதல் இயந்திரங்கள் தேவைப்படும். இதற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிட வேண்டியிருக்கும்.

ஒரே நேர தோ்தல் திட்டத்தில் உள்ள ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால் மூன்று தோ்தல்களுக்கும் ஒரே வாக்குச்சாவடி - ஒரே பணியாளா்கள் என்பதே. இத்திட்டத்தில் உள்ள நடைமுறை சாா்ந்த பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் விவாதிப்பது முக்கியம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com