அயோத்தி ராமர் கோயில் விழாவில் திருப்பதி லட்டு வழங்கப்பட்டதா? - அர்ச்சகர் தகவல்!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பிரசாதமாக திருப்பதி லட்டு வழங்கப்பட்டதா? - கோயில் தலைமை அர்ச்சகர் விளக்கம்.
ayodhya
அயோத்தி ராமர் கோயில்
Published on
Updated on
1 min read

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பிரசாதமாக திருப்பதி லட்டு வழங்கப்பட்டதாக கோயில் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியானதையடுத்து இந்த விவகாரம் நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது.

லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து அயோத்தியில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

'எத்தனை லட்டுகள் கொண்டு வரப்பட்டன என்பது எனக்குத் தெரியாது. அறக்கட்டளைக்கு மட்டும்தான் அது தெரியும். ஆனால், கொண்டுவரப்பட்ட லட்டுகள் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. லட்டில் கலப்படம் தொடர்பான அறிக்கைகள் ஆபத்தான சதியைச் சுட்டிக்காட்டுகின்றன' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.

இருப்பினும், ராமர் கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில்,

'விழாவின்போது ஏலக்காய் விதைகள் மட்டுமே பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. திருப்பதி லட்டுகள் தொடர்பாக மத்திய அரசின் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 1981-ம் ஆண்டு எனது வாழ்க்கையில் ஒருமுறை திருப்பதி சென்றிருந்தேன். சர்ச்சை குறித்து கருத்து சொல்வது முறையல்ல' என்று தெரிவித்தார்.

திருப்பதி லட்டில் விவகாரத்தினால் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து கேள்வி எழும்பியுள்ளது. குறிப்பாக லட்டு பிரசாதமாக வழங்கப்படும் கோயில்களில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அயோத்தியில் புகழ்பெற்ற அனுமன் கர்ஹி கோயிலில் வழங்கப்படும் லட்டு குறித்து கோயில் அமைப்பின் தலைவர் சஞ்சய் தாஸ்,

'நாங்கள் உள்நாட்டு மாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்களையே லட்டு தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். தரமான நிறுவனங்களின் நெய்யைத்தான் பயன்படுத்துகிறோம்.

அவ்வப்போது, ​​நெய்யின் தூய்மையை பரிசோதித்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com