'உதயநிதி துணை முதல்வரா? என சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம் கேட்கின்றனர்'

சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம், தான் துணை முதலமைச்சர் ஆகப் போகிறேனா? என ஊடகத்தின் கேள்வி எழுப்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
udhayanidhi stalin
உதயநிதி ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம், தான் துணை முதலமைச்சர் ஆகப் போகிறேனா? என ஊடகத்தினர் கேள்வி எழுப்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர்களே, உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கடந்த செப். 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் முதல்முறையாக 'மு.க.ஸ்டாலின் விருது' பெற்ற பழநி மாணிக்கம் 'உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள், இன்னும் தாமதிக்க வேண்டாம்' என்று பேசினார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசினர்.

இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் உதயநிதி துணை முதல்வர் ஆகிவிடுவார் என திமுக அமைச்சர்கள் தற்போது கூறி வருகின்றனர்.

தொடர்ந்து வருகிற செப். 28 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள திமுக பவள விழாவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பேசப்படுகிறது.

இதனிடையே, வேட்டையன் பட இசைவெளியீட்டுக்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு 'அரசியல் கேள்வி கேக்காதீங்க' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார் ரஜினி.

இதன்பின்னர் நேற்று சென்னையில் நடைபெற்ற `தேர்தல் 2024: மீளும் 'மக்கள்' ஆட்சி' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி,

"காலையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்து என் போனில் யூ டியூபை திறந்து பார்த்தேன். திறந்து பார்த்து நானே பயந்துவிட்டேன்,

'உதயநிதி துணை முதலமைச்சராகிறாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம்' என்று தலைப்பு.

துணை முதலமைச்சருக்கான அறிவிப்பே இன்னும் வரவில்லை. அதற்கான முழு உரிமையும் முதலமைச்சரிடம்தான் இருக்கிறது. இதை முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். அவரிடமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.

சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம் மைக்கை நீட்டி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப் போகிறாரா? உங்கள் கருத்து என்னவென்று கேட்கிறீர்கள். என்னிடம் கேட்டீர்கள் சரி,

ரஜினி படப்பிடிப்புக்காக விமான நிலையத்துக்குச் செல்கிறார். அவருக்கு விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டதுபோல, அவரிடம் வழிமறித்து கேள்வி கேட்கிறீர்கள். அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டு போய்விட்டார்.

ஆனால் ஊடகம் வைத்துள்ள தலைப்பு என்ன? இதைப் படிப்பவர்களுக்கு என்ன தோன்றும்?

இப்போது பேசுதற்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. 'சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உதயநிதி பதிலடி' என்று வைப்பார்கள். நானே தலைப்பு எடுத்துக் கொடுக்கிறேன்' என நகைச்சுவையாகப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com