
லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் கேரள தொழிலதிபருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.
கேரளத்தை பூர்விகமாக கொண்ட ரின்சன் ஜோஸ் என்பவருக்கு சொந்தமான நோர்டா குளோபல் லிமிடெட் நிறுவனம்தான் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கு பேஜர்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ரின்சன் ஜோஸ் யார்?
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்தவர் ரின்சன் ஜோஸ்(வயது 39). பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை வயநாடு மற்றும் பெங்களூருவில் முடித்த இவர், ஐ.டி. நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில், 2010-ஆம் ஆண்டு புதுச்சேரியில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவுடன், 2012-ஆம் ஆண்டில் நார்வே நாட்டின் குடியுரிமையைப் பெற்று மனைவியுடன் அங்கு சென்றுவிட்டார்.
பல்கேரியாவை மையமாக கொண்டு இயங்கும் நோர்டா குளோபல் லிமிடெட் என்ற நிறுவனத்தை ரின்சன் ஜோஸ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம்தான், ஹிஸ்புல்லா அமைப்புக்கு புதிய வகை பேஜர்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜோஸியின் நிறுவனம், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டு பேஜர்களை தயாரித்து வழங்கியுள்ளது. இவரது நிறுவனம் கொடுத்த பேஜர்கள்தான் வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
ரின்சன் ஜோஸ் தலைமறைவு?
லெபனானிலும், சிரியாவிலும் கடந்த செவ்வாய்க்கிழமை பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில், 12 பேர் உயிரிழந்த நிலையில், 2,800-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பேஜர்கள் வெடித்த சம்பவத்தில், இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம்சாட்டிய நிலையில், பேஜர்கள் தயாரிக்கும் போதே அதனை வெடிக்கச் செய்யும் கருவிகளும் பொருத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், பேஜர்கள் வெடித்த செவ்வாய்க்கிழமை முதல் ரின்சன் ஜோஸையும் அவரது மனைவியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் உள்ள ஜோஸின் சகோதரர் வீட்டுக்கு சென்றிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பல்கேரியா அரசு விளக்கம்
பேஜர்கள் வெடித்த விவகாரத்தில் சர்வதேச பாதுகாப்பு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், ஜோஸின் நிறுவனத்தை முடக்கியுள்ளனர்.
இதனிடையே, நோர்டா குளோபல் நிறுவனம் அல்லது அதன் உரிமையாளர் ஜோஸ், இதுவரை எவ்விதமான சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டதில்லை என்று பல்கேரியா அரசு தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு
ஜோஸ் மீதான சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான குற்றச்சாட்டை அவரது மாமா தங்கச்சன் மறுத்துள்ளார். கடைசியாக, சொந்த ஊரான மானந்தவாடிக்கு கடந்த 2022ஆம் ஆண்டில் ஜோஸ் வந்ததாகவும், ஒரு வாரத்துக்கு முன்பு வரை குடும்பத்துடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நார்வேவில் ஜோஸ் பல தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலதிபராக இருந்துள்ளார். நார்டா லிங் என்ற ஐடி நிறுவனத்தையும் நடத்தி வந்த ஜோஸ், இந்திய விளையாட்டு மற்றும் கலாச்சார சங்கத்தையும் நார்வேவில் நடத்தி வருகிறார்.
ஜோஸ் குடும்பத்துக்கு பாதுகாப்பு
ஜோஸ் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் முதல்கட்ட தகவல்களை அவரது கிராமத்தில் சேகரித்துள்ளதாக வயநாடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடகங்களில் ஜோஸ் குடும்பம் தொடர்பான விவரங்கள் வெளியானதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தை சுற்றி ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.