அயோத்தியில் கடந்த ஜனவரியில் நடந்த ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவின்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் 1 லட்சம் லட்டுக்கள் பக்தர்களுக்கு பிரசாதகமாக விநியோகிக்கப்பட்டதாக தலைமை அர்ச்சகர் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையின்போது, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பக்தர்களுக்கு விநியோகிக்க 1 லட்சம் லட்டுகள் தயாரித்து அனுப்ப திருப்பதி தேவஸ்தானம்தான் முடிவு செய்துள்ளது. இது குறித்து அறக்கட்டளை வாரியத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறியது குறித்து தகவல் பரவிய நிலையில் பக்தர்களிடமிருந்து சுமார் 2,000 கிலோ சுத்தமான பசு நெய் நன்கொடுமையாக பெறப்பட்டு, அதன் மூலம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டதாக கடந்த ஜனவரி மாதமே திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.
எனவே, ராமர் கோயிலில் விநியோகிக்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு சேர்த்த நெய் கலக்கப்படவில்லை என்று ராமர் பக்தர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம், அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பிராண பிரதிஷ்டைக்கான முக்கிய பூஜைகள் செய்து, பிரதமர் நரேந்திர மோடி, பாலராமரின் சிலைக்கு ஆரத்திக் காட்டினார்.
இந்த நிலையில், திருப்பதி லட்டில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து ராம பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் இருக்கிறது.
அயோத்திக்காக 25 கிராம் எடையில் தயாரிக்கப்பட்ட லட்டுக்கள்.
வழக்கமாக ஒரு திருப்பதி லட்டின் எடை 170 கிராம் இருக்குமாம்.
நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பெரிய லட்டுக்களும், ஏழுமலையானை தரிசித்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க 25 கிராம் எடையுள்ள 75,000 சிறிய லட்டுக்களும் தயாரிக்கப்படுமாம்.
அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற பிராண பிரதிஷ்டையின்போது, திருப்பதியிலிருந்து வரவழைக்கப்பட்ட லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. தற்போது லட்டுக்களின் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எத்தனை லட்டுக்கள் வரவழைக்கப்பட்டன என்பது தெரியவில்லை. ராமர் கோயில் அறக்கட்டளைக்குத் தெரியும். எவ்வளவு லட்டுக்கள் வந்ததோ அவை அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதகமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது, லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக வரும் சர்ச்சை விரும்பத்தகாததாக உள்ளது என்றார்.
திருப்பதியிலிருந்து 1 லட்சம் லட்டுகள் வரவழைக்கப்பட்டு, அயோத்தி ராமர் கோயிலில் விநியோகம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து 8000 முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.