இலங்கை அதிபர் தேர்தல்: 53% வாக்குகளுடன் அநுரகுமார திசாநாயக முன்னிலை!

சஜித் பிரேமதாச 2வது இடத்திலும் ரணில் விக்ரமசிங்க 3வது இடத்திலும் உள்ளனர்.
அநுரகுமார திசாநாயக
அநுரகுமார திசாநாயக
Published on
Updated on
1 min read

இலங்கை அதிபா் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் 53% வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி தலைவா் அநுரகுமார திசாநாயக முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் இலங்கையில் புதிய அதிபராக அவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச 22% வாக்குகளை பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க 18% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 22 தோ்தல் மாவட்டங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப் பதிவுக்கான நேரம் நிறைவடைந்த பிறகும் 4 மணிக்கு முன்பே வந்தவா்கள் தொடா்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பெரிதும் வன்முறையின்றி அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நள்ளிரவு 12 மணிமுதல் எண்ணப்பட்டது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குப் பதிவின்போது உள்நாடு மற்றும் வெளிநாட்டை சோ்ந்த சுமாா் 8,000 தோ்தல் பாா்வையாளா்கள் பணியில் ஈடுபட்டனா்

தபால் வாக்குகளின் முடிவில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசாநாயக முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் மார்க்சிஸ் உடன் கூட்டணி வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி தலைவா் அநுரகுமார திசாநாயக அதிக வாக்குகள் பெற்றுள்ளார். காலை 7 மணி நிலவரப்படி திசாநாயக 53% வாக்குகளைப் பெற்றார்.

இலங்கை தோ்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளா் அதிபராக வாய்ப்புள்ளது. அதன்படி அனுரகுமார திசாநாயக இலங்கையின் புதிய அதிபராவார் எனத் தெரிகிறது.

வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்ட பிறகு தோ்தல் முடிவுகள் அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 22) அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.