கையில் பணமெடுக்காமல், பூக்கடை முதல் டீக்கடை வரை எண்ம (டிஜிட்டல்) மயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயிக்க திட்டமிட்டிருக்கும் முடிவுக்கு பயனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
லோகல் சர்க்கிள் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், தாங்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையையே நிறுத்திவிடுவோம் என 75 சதவீதம் பேர் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 308 மாவட்டங்களில் இருந்து சுமார் 42000 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், 38 சதவீதம் பேர், தங்களது பணப்புழக்கத்தில் பெரும்பாலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைதான் என்று தெரிவித்திருக்கிறார்களாம்.
ஒட்டுமொத்தமாக ஆய்வில் பங்கேற்றவர்களில் வெறும் 22 சதவீதம் பேர்தான், கட்டணம் வசூலித்தாலும், செலுத்த தயார் என்றும், 75 சதவீதம் பேர் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தால், டிஜிட்டல் முறையை பயன்படுத்த மாட்டேன் என்றும், தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டமும் யோசனையில் உள்ளது. 2023 - 24ஆம் நிதியாண்டில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முதல் முறையாக 10 ஆயிரம் கோடியை எட்டி சாதனை படைத்தது. மொத்தப் பரிவர்த்தனை 13 ஆயிரம் கோடியாக இருந்தது.
எனவே, இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தால், இந்த வளர்ச்சியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மக்களின் கருத்துகளை கேட்ட பிறகே, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.