ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்)
ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்)Instagram | Jagan Mohan Reddy

திருப்பதி செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி நம்பிக்கை தெரிவிக்க வேண்டும்: பாஜக

திருப்பதிக்கு செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி, நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட பாஜக கோரிக்கை
Published on

திருப்பதி கோயிலுக்கு செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி, நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட பாஜகவும் ஜனசேனை கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி நம்பிக்கை தெரிவிக்க வேண்டும்

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, வரும் சனிக்கிழமையில் திருப்பதியில் பரிகார பூஜை ஒன்று நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்துக்கள் அல்லாத வேறு மதத்தினர் திருப்பதி வரும் முன்னர், நம்பிக்கை பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவரான டக்குபதி புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.

இதுகுறித்து டக்குபதி புரந்தேஸ்வரி, தனது எக்ஸ் பக்கத்தில் ``ஜெகன் மோகன் ரெட்டி செப். 28 ஆம் தேதியில் திருமலைக்கு வர விரும்புகிறார். ஒருவரின் நம்பிக்கையை அறிவிக்கும் நடைமுறை, திருமலையில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆந்திர வருவாய் அறக்கட்டளை-1, விதி எண் 16 இன் எம்.எஸ்எண்-311-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் விசுவாச வடிவத்தில் தரிசனத்திற்குமுன், வைகுண்ட வரிசை வளாகத்தில் ஓர் அறிவிப்பை வழங்க வேண்டும்.

இது திருமலை திருப்பதி தேவஸ்தான பொது விதிமுறைகள் விதி 136 இன் படி உள்ளது. ஆகையால், திருமலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஏறத் தொடங்குவதற்கு முன்பே, கருடாவில் தனது நம்பிக்கையை அறிவிக்க வேண்டும் என்று பாஜக கோருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்து கோவில்களில் இந்து அல்லாதவர்களை நீக்க வேண்டும்

மேலும், பாஜக எம்.எல்.ஏ.வான ராஜா சிங் ``ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக, அதுகுறித்து இருமுறை யோசிக்க வேண்டும். இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்த பிறகு, தரிசனத்திற்குச் செல்ல வெட்கமாக இல்லையா?

புனித பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்திருப்பது, பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இந்து கோவில்களில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதவர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்பீர்களா?

அதுமட்டுமின்றி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவரான ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஜனசேனா கட்சி ``ஜெகன்மோகன் ரெட்டி திருமலைக்கு செல்வதற்கு முன்னர், நம்பிக்கை பிரகடனத்தில் கையெழுத்திடுவீர்களா? திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர்களாக பிற மதங்களைச் சேர்ந்தவர்களை நியமித்ததற்காக மன்னிப்பு கேட்பீர்களா? கோடிக்கணக்கான பக்தர்களை அசைவ லட்டு சாப்பிட வைத்ததற்காக தவம் செய்வீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சோனியா காந்தி உள்பட

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ``திருமலை கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு, வெங்கடேஸ்வராவை நம்புவதாக ஜெகன்மோகன் ரெட்டி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டாரா? முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரும்கூட, திருமலை கோயிலுக்குச் சென்றபோது பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டனர்’’ என்று கேள்வி எழுப்பினார்.

அசைவ லட்டு?

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் இது கலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு உள்பட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டினார்.

சந்திரபாபு நாயுடு மீதான நடவடிக்கைக்கு கோரிக்கை

இதனிடையே, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

பரிகார பூஜை

இந்த நிலையில், திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு, மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com