பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர்தான், ஆனால் அவர் கடவுள் அல்ல என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
தில்லி சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் முதல்வர் கேஜரிவால்,
'என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங், வைபவ், விஜய் நாயர் என 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தனர். 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்த பின்னரும் எங்கள் கட்சி பலத்துடன் நிற்கிறது.
நான் பாஜகவுக்கு சவால் விடுகிறேன், உங்கள் கட்சியைச் சேர்ந்த 2 பேரை சிறையில் தள்ளுங்கள், உங்கள் கட்சி உடைந்துவிடும்.
என் மீது கடுமையான சட்டங்களின் மூலம் வழக்கு போட்டதால் ஜாமீன் எளிதாகக் கிடைக்கவில்லை. இறுதியாக உச்சநீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது.
நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் ராஜிநாமா செய்தேன். நான் யாரையும் இதுகுறித்து கேட்கவில்லை. நானே ராஜிநாமா செய்தேன். கேஜரிவால் நேர்மையானவர் என்று மக்களாகிய நீங்கள் நினைத்ததால் எனக்கு வாக்களியுங்கள். இல்லையெனில் எனக்கு வாக்களிக்க வேண்டாம்.
என்னையும், மணீஷ் சிசோடியாவையும் இங்கு பார்க்க எதிர்க்கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் வருத்தப்படுவார்கள். பிரதமர் மோடி மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரிடம் நிறைய இருக்கிறது. ஆனால் அவர் கடவுள் அல்ல. கடவுள் எங்களுடன் இருக்கிறார்.
நான் இன்று முதல்வருடன் சாலைகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தேன். தில்லி பல்கலைக்கழக சாலைகளை சீரமைக்க உத்தரவிடக் கூறினேன்' என்று பேசினார்.
முன்னதாக கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அமைச்சர் அதிஷி முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இன்று நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏவாக கேஜரிவால் கடைசி இருக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.