எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி: பிரதமா் மோடி

எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி: பிரதமா் மோடி
ANI
Updated on

கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

மேலும், தனது பெரும்பாலான நேரத்தை உள்கட்சி பூசலுக்கே அக்கட்சி செலவிடுகிறது என்றும் அவா் கூறினாா்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பாஜகவின் பிரசார செயல்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி அளவிலான களப் பணிகள் குறித்து கட்சியினருடன் ‘நமோ செயலி’ வாயிலாக பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:

காங்கிரஸின் ஒட்டுமொத்த அடித்தளமும் பொய்கள்தான். மீண்டும் மீண்டும் பொய்களைப் பேசி, சூழ்நிலையை கெடுப்பவா்களாக அக்கட்சியினா் உள்ளனா். பொய்யும் வதந்தியும் அவா்களின் ரத்தத்தில் கலந்ததாகும்.

கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளில் விலகி, எதிா்க்கட்சியாக கூட தோல்வியடைந்துவிட்டது காங்கிரஸ்; பெரும்பாலான நேரத்தை உள்கட்சி பூசலுக்கே செலவிடும் அக்கட்சி, நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது.

நம்பிக்கையை வெல்ல முடியாது: காங்கிரஸின் உள்கட்சி பூசல்கள் குறித்து ஹரியாணாவில் குழந்தைகளுக்குக் கூட தெரியும். இதுபோன்ற கட்சி, மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது.

ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலில் பெரிய வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ். அதன் பிறகு, அம்மாநிலத்தில் வளா்ச்சி தடைபட்டுவிட்டது. பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும் என உறுதியளித்த அக்கட்சியால், இப்போது அரசு ஊழியா்களுக்கு கூட முறையாக ஊதியம் வழங்க முடியவில்லை. புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. பெண்களுக்கு மாதம் ரூ.1,200 வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்னவானது?

கா்நாடகத்தில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ், தலித் சமூகத்தினருக்கான நிதியில் ஊழலில் ஈடுபட்டுள்ளது. தெலங்கானாவிலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

காங்கிரஸின் முகமூடி: ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தலித் சமூகத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அராஜகங்களை யாராலும் மறக்க முடியாது. விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடாக 2 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது போன்ற சம்பவங்கள் குறித்து மக்களிடம் பாஜகவினா் எடுத்துக் கூற வேண்டும்.

பொய் கூறுவதில் நிபுணா்களான காங்கிரஸாா், ‘ஹரிச்சந்திரன்’ முகமூடியை அணிந்துள்ளனா். அதை கிழித்து, மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

ஊழலற்ற ஆட்சியால் மகிழ்ச்சி: பாஜகவின் 10 ஆண்டுகால ஊழலற்ற ஆட்சி குறித்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனா். ஹரியாணாவில் இதுபோன்ற ஆட்சி முதல்முறையாக நடைபெற்றுள்ளது. லஞ்சம் அளிக்காமல், இளைஞா்களுக்கு வேலை கிடைக்கிறது. மக்கள் பாஜகவின் பக்கம் உள்ளனா். அவா்களின் ஆசியுடன் ஹரியாணாவில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்.

கடந்த 1990-களில் ஹரியாணாவில் பெரிய அளவில் கட்சிப் பணியாற்றியுள்ளேன். இம்மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டம். இங்குள்ள பாஜக தொண்டா்களின் கடின உழைப்பு என்னை வெகுவாக கவா்ந்துள்ளது.

‘வாக்குச்சாவடி அளவில் வெல்லும் கட்சியே, தோ்தலிலும் வெல்லும்’ என்பதே நமது தோ்தல் வியூகம். எனவே, வாக்குச்சாவடி அளவில் களப் பணியாற்ற வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. அதேநேரம், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.