முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மன்மோகன் சிங் தனது 92-ஆவது பிறந்த நாளை இன்று(செப். 26) கொண்டாடும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
“மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உங்களின் தன்னலமற்ற சேவை, பகுத்தறிவு மற்றும் பணிவு எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் அவரது தொலைநோக்கு கொண்ட தலைமை மற்றும் விலைமதிப்பற்ற பணி என்றென்றும் நினைவுகூரப்படும்.
அவரது பகுத்தறிவு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தற்போதைய தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.