ஜார்க்கண்டில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சா் சிவராஜ்சிங் சௌஹான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம், லதேஹரில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அவர் பங்கேற்று பேசியதாவது, ஜார்க்கண்டில் பெரும் ஊழல் நடந்துள்ளது. பணம் இல்லாமல் இங்கு எதுவும் நகராது. பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய நிதியை ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு தவறாகப் பயன்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து நாங்கள் முழுமையான விசாரணையைத் தொடங்குவோம். ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் "ஊழல்" அரசை வாக்காளர்கள் அகற்ற வேண்டும்.
மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும். மேலும் பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகை ரூ.2,000ஆக இரட்டிப்பாக்கப்படும். ஜார்க்கண்ட் இளைஞர்களுக்கு எதிர்கால கனவுகளைக் காட்டி அவர்களின் மூச்சை எப்படி ஜேஎம்எம் பறிக்கிறது என்பதை முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.
81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் நடப்பு அரசின் பதவிக்காலம் 2025 ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.