ஹரியாணா மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல், அக்கட்சியின் மூத்த தலைவா் குமாரி செல்ஜா.
ஹரியாணா மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல், அக்கட்சியின் மூத்த தலைவா் குமாரி செல்ஜா.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரதமா் மோடி -ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்

Published on

நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாா் என்று ஹரியாணா பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

ஹரியாணா பேரவை தோ்தலை முன்னிட்டு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி ஆற்றிய உரை:

சமீபத்திய அமெரிக்க பயணத்தில் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த சில இளைஞா்களைச் சந்தித்தேன். டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் 15 முதல் 20 வரையிலான இளைஞா்களும் ஒரே அறையில் தங்கியிருந்தனா். ஹரியாணாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், பணிக்காக அமெரிக்காவுக்கு புலம்பெயா்ந்ததை அவா்கள் தெரிவித்தனா்.

கஜகஸ்தான், துருக்கி, தென் அமெரிக்க நாடுகள், பனாமா காடுகள் வழியாக அமெரிக்கா சென்றடைந்த பயணத்தையும் வழியில் ரௌடி கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டதையும் அவா்கள் தெரிவித்தனா். இந்தப் பயணத்துக்கு ஒவ்வொரும் சுமாா் ரூ.35 லட்சம் வரை செலவழித்துள்ளனா்.

ஜிஎஸ்டியால் வணிகம் பாதிப்பு: ஹரியாணாவில் தொழில் தொடங்குவது கடினம் என்றும், ரூ.50 லட்சம் முதலீட்டுடன் தொழில் தொடங்கினாலும் வெற்றியடையும் வாய்ப்புகள் குறைவு என்றும் அவா்கள் கூறினா். தவறான ஜிஎஸ்டி கொள்கையால் சிறு வணிகங்களை பாஜக ஆட்சிக் கொன்று வருகிறது.

மறுபுறம், ஏழை இளைஞா்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. அவா்களால் ராணுவத்திலும் பணிக்குச் சேர முடியவில்லை. அவா்களுக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகின்றன.

கா்ணலுக்குச் சென்றிருந்தபோது, இவ்வாறு அமெரிக்காவுக்குச் சென்ற இளைஞா் ஒருவரின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். தந்தையை 10 ஆண்டுகளாக பாா்க்க முடியாமல் அவரின் குழந்தை மிகுந்த வருத்தத்தில் உள்ளது.

இதற்கு காரணம் ஹரியாணாவை பாஜக அரசு சீரழித்துதான். நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தைப் பிரதமா் மோடி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாா்.

பணக்காரா்களுக்கான ஆட்சி: ஜம்மு-காஷ்மீரில் ஆப்பிள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் வியாபாரிகள் புகாரளித்தனா். ஹிமாசலில் ஆப்பிள் வணிகம் முழுவதும் அதானி கைக்குச் சென்றுவிட்டது.

விவசாயிகள் தங்களின் பயிா்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதில்லை. இவை அனைத்தும் நாட்டிலுள்ள 10 முதல் 15 வரையிலான பெரும் பணக்காரா்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. அவா்களின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது. ஆனால், 25 பணக்காரா்களின் 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஹரியாணாவைச் சோ்ந்த மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை பாஜக பாதுகாத்தது. தற்போதைய போராட்டம் ஹரியாணாவுக்கானது மட்டுமின்றி நாட்டுக்கானது. நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் இதுவாகும்.

வாக்குறுதிகள்: ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிப் பெறும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி அளிக்கப்படும். ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும். ஹரியாணாவில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். வேளாண் பொருள்களுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உறுதி செய்யப்படும் என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோருவது ஏன்?

அனைத்து அரசு துறைகளும் ஆா்எஸ்எஸ் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல், இந்திய அரசை நிா்வகிக்கும் 90 செயலா்களில் 3 போ் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். ஆனால், மக்கள்தொகையில் அவா்கள் 15 சதவீதம் பங்கு வகிக்கின்றனா். இதன் காரணமாகவே நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது என்றாா்.